தர்மபுரியில் நாளை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: ரூ.1,044 கோடி மதிப்பிலான புதிய கட்டிடங்கள்


தர்மபுரியில் நாளை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: ரூ.1,044 கோடி மதிப்பிலான புதிய கட்டிடங்கள்
x
தினத்தந்தி 6 Oct 2017 4:30 AM IST (Updated: 6 Oct 2017 3:07 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் நாளை (சனிக்கிழமை) நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் ரூ.1,044 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.

தர்மபுரி,

தமிழக அரசின் சார்பில் முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. நிறுவனத்தலைவருமான எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழக அரசின் சார்பில் தர்மபுரியில் நாளை(சனிக்கிழமை) எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. தர்மபுரி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் இந்த விழாவிற்கு தமிழக சட்டபேரவை தலைவர் ப.தனபால் தலைமை தாங்குகிறார். தலைமை செயலாளர் கிரிஜாவைத்தியநாதன் வரவேற்று பேசுகிறார். தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். உருவப்படத்தை திறந்து வைத்து ரூ.1,044 கோடியே 87 லட்சம் மதிப்பிலான 33 புதிய கட்டிடங்களை திறந்து வைக்கிறார். மேலும் ரூ.29 கோடியே 44 லட்சம் மதிப்பிலான 20 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கும், பல்வேறு துறைகளின் சார்பில் 25 ஆயிரத்து 96 பயனாளிகளுக்கு ரூ.183 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசுகிறார்.

இந்த விழாவில் பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பித்துரை, தமிழக அமைச்சர்கள், தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி, வாரியத்தலைவர்கள், அரசு தலைமை கொறடா மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கிறார்கள். முடிவில் கலெக்டர் விவேகானந்தன் நன்றி கூறுகிறார். இந்த விழாவையொட்டி நாளை மதியம் 1 மணி முதல் 3 மணி வரை எம்.ஜி.ஆர். பற்றி விளக்கும் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன.

முன்னதாக நாளை காலை 9 மணிக்கு அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சி மற்றும் பல்வேறு துறைகளின் சாதனை விளக்க கண்காட்சி நடக்கிறது. இந்த கண்காட்சியை அமைச்சர்கள் திறந்து வைக்கிறார்கள். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், கலெக்டர் விவேகானந்தன் மற்றும் அனைத்துதுறை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி தர்மபுரி மாவட்டம் முழுவதும் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்கள், அரசியல் மூலம் பொதுமக்களுக்கு அவர் ஆற்றிய தொண்டுகள், சீர்திருத்த திட்டங்கள் குறித்து நவீன மின்னணு வாகனங்கள் மூலம் கிராமங்கள் தோறும் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் புகைப்பட கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தர்மபுரி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் பிரமாண்ட மேடை, பொதுமக்கள் அமரும் பந்தல் மற்றும் கண்காட்சிகளுக்கான அரங்குகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தர்மபுரி நகரம் மற்றும் சேலம் பைபாஸ் சாலையின் இருபுறங்களிலும் விளம்பர தட்டிகள், கட்சி கொடிகள், அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்கள், கட்அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த விழாவிற்கு வருபவர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு இடவசதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள், சிறப்பு விருந்தினர்கள் அமர்வதற்கு வசதியாக பந்தல் வளாகத்தில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. விழா நடைபெறும் அரசு கலைக்கல்லூரி வளாகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தர்மபுரி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த நிலையில் இரவு பகலாக நடைபெறும் மேடை அமைக்கும் பணியை அமைச்சர் கே.பி.அன்பழகன், கலெக்டர் விவேகானந்தன், போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தர்மபுரியில் நாளை (சனிக் கிழமை) நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று (வெள்ளிக்கிழமை) மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். பின்னர், அங்கிருந்து கார் மூலம் சேலத்திற்கு வரும் அவர், சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது வீட்டில் இரவு தங்குகிறார்.

இதனை தொடர்ந்து நாளை (சனிக்கிழமை) மதியம் தர்மபுரியில் நடைபெறும் நூற்றாண்டு விழாவில் பங்கேற்றுவிட்டு மீண்டும் இரவில் சேலத்திற்கு வருகிறார். நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) சேலத்தில் உள்ள அவரது வீட்டில் கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், எடப்பாடியில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் முதல்-அமைச்சர் கலந்து கொண்டு மக்களுக்கு நல உதவிகள் வழங்குகிறார். அன்றைய தினம் இரவு சென்னைக்கு புறப்பட்டு செல்வார் என்று கூறப்படுகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் வருகையையொட்டி மாநகர் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். 

Related Tags :
Next Story