ஜோலார்பேட்டை அருகே தண்டவாளத்தில் விரிசல்; ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்


ஜோலார்பேட்டை அருகே தண்டவாளத்தில் விரிசல்; ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்
x
தினத்தந்தி 6 Oct 2017 5:39 AM IST (Updated: 6 Oct 2017 5:39 AM IST)
t-max-icont-min-icon

ஜோலார்பேட்டை அருகே ரெயில்வே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலால் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.

ஜோலார்பேட்டை,

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை – கேத்தாண்டப்பட்டிக்கு இடையே கல்லாறு பகுதியில் நேற்று காலை 9.10 மணி அளவில் ரெயில்வே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருப்பதை ரெயில்வே ஊழியர்கள் கண்டுபிடித்தனர். இதுகுறித்து உதவி கோட்ட பொறியாளர் வர்மா, ஜோலார்பேட்டை ரெயில் நிலைய மேலாளர் பழனிசாமி ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, விரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால் சென்னை – பெங்களூரு செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் – சென்னை செல்லும் டேராடூன் எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம் – ஆடியா செல்லும் எக்ஸ்பிரஸ், மங்களூரு – காச்சிகோடா செல்லும் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.

பின்னர் காலை 10.20 மணிக்கு தண்டவாள விரிசல் சரிசெய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆங்காங்கே நிறுத்தப்பட்ட ரெயில்கள் ஒரு மணி நேரத்திற்கு பிறகு புறப்பட்டு சென்றன.

இதேபோல கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆம்பூர், வாணியம்பாடியில் ரெயில்வே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.



Next Story