மாநகராட்சி ஆணையாளர் சிவசுப்பிரமணியன் எச்சரிக்கை மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சினால் நடவடிக்கை
நெல்லை மாநகராட்சி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு, வணிகம் மற்றும் வீடுகளில் ஒரு சிலர் சட்ட விரோதமாக குடிநீர் இணைப்பில் மின் மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சுவதாக ஏராளமான புகார்கள் வந்துள்ளன.
நெல்லை,
நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
நெல்லை மாநகராட்சி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு, வணிகம் மற்றும் வீடுகளில் ஒரு சிலர் சட்ட விரோதமாக குடிநீர் இணைப்பில் மின் மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சுவதாக ஏராளமான புகார்கள் வந்துள்ளன. மாநகராட்சி அலுவலர்கள் மூலம் மேற்படி சட்ட விரோதமாக மின் மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சுவதை கண்டறியப்படும் நேரத்தில் மின்மோட்டார் பறிமுதல் செய்யப்பட்டு, குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்படும். மேலும் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
அவர் வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக்குறிப்பில், “நெல்லை மாநகர பகுதியில் கட்டிட இடிபாடு பொருட்கள், கழிவுகள் மற்றும் கட்டிடம் கட்ட உபயோகிக்கும் செங்கல், மணல், ஜல்லிக்கற்களை சாலையில் குவித்து வைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிறார்கள். இதுபோன்று செய்தால், மாநகராட்சி கட்டிட அனுமதி எவ்வித மறு அறிவிப்பும் இன்றி ரத்து செய்யப்படும். கட்டுமான பணிகள் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும்“ என்று கூறப்பட்டு இருந்தது.