இணைப்பு ரெயில்கள் ரத்து: ரெயில் நிலையத்தில் விருதுநகர் பயணிகள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம்
இணைப்பு ரெயில்கள் ரத்து காரணமாக மானாமதுரை ரெயில் நிலையத்தில் முன்னதாகவே ராமேசுவரம் பயணிகள் ரெயில் புறப்பட்டு சென்றதால் விருதுநகரில் இருந்து ரெயிலில் வந்த பயணிகள் ரெயில்வே அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மானாமதுரை,
மதுரையில் இருந்து தினந்தோறும் ராமேசுவரத்திற்கு மானாமதுரை வழியாக பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மதுரையில் இருந்து புறப்பட்டு மானாமதுரைக்கு காலை 7.50 மணிக்கு வந்து அதன்பின் 8.05 மணிக்கு ராமேசுவரத்திற்கு புறப்பட்டு செல்லும். இதே நேரத்தில் விருதுநகரில் இருந்து மானாமதுரை வழியாக திருச்சிக்கு செல்லும் டெமோ ரெயில் மானாமதுரை ரெயில் நிலையத்திற்கு காலை 7.50 மணிக்கு வந்து பின்னர் 8.10 மணிக்கு திருச்சி புறப்பட்டு செல்லும்.
இந்த விருதுநகர் ரெயில் மானாமதுரை ரெயில் நிலையத்திற்கு வந்து நின்று அதன்பின் 5 நிமிடம் கழித்து தான் ராமேசுவரம் ரெயில் புறப்படும். இதற்கு காரணம் விருதுநகர், அருப்புக்கோட்டை, நரிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினசரி ஏராளமான பயணிகள் ராமேசுவரம், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு, தனியார் அலுவலகங்களுக்கு வேலை மற்றும் சொந்த வேலை காரணமாக சென்று வருகின்றனர்.
இதற்காக இணைப்பு ரெயிலாக ராமேசுவரம், திருச்சி ரெயில்கள் இயக்கப்படுகிறது. இதனை தென்னக ரெயில்வே கடந்த 5–ந் தேதி முதல் ரத்து செய்து விட்டது. இது குறித்த அறிவிப்பை வெளியிடாததால் 100–க்கும் மேற்பட்ட பயணிகள் நேற்று மானாமதுரை ரெயில் நிலையத்திற்கு வந்து ராமேசுவரம் செல்ல முடியாமல் மிகவும் அவதிஅடைந்தனர்.
நேற்று விருதுநகர்–திருச்சி ரெயில் வருவதற்கு முன்னதாகவே மதுரை–ராமேசுவரம் ரெயில் புறப்பட்டு சென்று விட்டது. இதையடுத்து ரெயில்வே அதிகாரிகளுடன் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ரெயில்வே அதிகாரிகள், இது உயர் அதிகாரிகள் உத்தரவு எங்களுக்கு எதுவும் தெரியாது என்று பயணிகளிடம் தெரிவித்தனர். ஆனாலும் ரெயில் அதிகாரிகளிடம் நீண்ட நேரம் வாக்குவாதம் செய்த பின் பயணிகள் வேறு வழியில்லாமல் பஸ்களில் புறப்பட்டு சென்றனர்.
இது குறித்து அருப்புகோட்டையைச் சேர்ந்த ரெயில் பயணி சிவா என்பவர் கூறியதாவது:– ரெயில்வே நிர்வாகத்தினர் காலையில் கூட அருப்புக்கோட்டையில் டிக்கெட் கொடுத்துள்ளனர். இந்த ராமேசுவரம் பயணிகள் இணைப்பு ரெயிலை நம்பி சீசன் டிக்கெட்டை ஏராளமான பயணிகள் எடுத்துள்ளோம். இணைப்பு ரெயில்கள் ரத்து என்ற அறிவிப்பு குறித்து அருப்புக்கோட்டை, நரிக்குடி, விருதுநகர் ரெயில் நிலையங்களில் எந்த வித தகவலும் இதனால் தினசரி வேலைக்கு செல்பவர்கள், ராமேசுவரம் செல்லும் பக்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்கள் பாதிப்படைவார்கள். எனவே தென்னக ரெயில்வே நிர்வாகம் மீண்டும் ராமேசுவரம் ரெயிலை இணைப்பு ரெயிலாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.