துரைப்பாக்கத்தில் போக்குவரத்து போலீசாருக்கு கத்திக்குத்து கல்லூரி மாணவர் கைது


துரைப்பாக்கத்தில் போக்குவரத்து போலீசாருக்கு கத்திக்குத்து கல்லூரி மாணவர் கைது
x
தினத்தந்தி 7 Oct 2017 4:30 AM IST (Updated: 7 Oct 2017 1:33 AM IST)
t-max-icont-min-icon

துரைப்பாக்கத்தில் போக்குவரத்து போலீசாரை கத்தியால் குத்திய கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த துரைப்பாக்கம் சிக்னல் பகுதியில் போக்குவரத்து போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சூரியநாராயணன் (வயது 50), போலீஸ்காரர் ஜெயபிரபாகர் (40) ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு வாலிபர் குடிபோதையில் வந்து ஜெயபிரபாகரிடம் பேசினார். பின்னர் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. உடனே அந்த வாலிபர் தன்னிடம் இருந்த கத்தியால் ஜெயபிரபாகரை குத்தினார். தடுக்க முயன்ற சூரியநாராயணனையும் கத்தியால் குத்தினார்.

தகவல் அறிந்ததும் துரைப்பாக்கம் போலீசார் விரைந்து வந்தனர். அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் வாலிபரை பிடிக்க முயன்றனர். ஆனால் போலீசார் தன்னை பிடிக்காமல் இருப்பதற்காக அங்கிருந்த தடுப்புகளை கார் மீது வீசினார். இதில் போக்குவரத்து போலீசாரின் கார் முன்பக்கம் உடைந்தது. இதையடுத்து வாலிபரை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த அரிகிருஷ்ணன் (25) என்பதும், இவர் துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு கல்லூரியில் 4–ம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து அரிகிருஷ்ணனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

* வில்லிவாக்கம் பகுதியில் புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்த தாமஸ் (44) கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 4 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

* சென்னை குறளகம் பகுதியில் மது விற்றதாக சித்ரா (35) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 15 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

* காசிமேட்டில் நித்யா என்பவரது ஐஸ் குடோனில் நேற்று முன்தினம் இரவு தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். மின்கசிவு காரணமாக ஏற்பட்ட இந்த தீ விபத்தில் மேஜை, நாற்காலி உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமாகின.

* ராயப்பேட்டை திரு.வி.க. சாலையில் சதீஷ் என்பவரது செல்போன் கடை பூட்டை உடைத்து மர்மநபர்கள் ரூ.1½ லட்சம் மதிப்புள்ள செல்போன்களை திருடிச்சென்று விட்டனர்.

* திருமுல்லைவாயல் அடுத்த அயப்பாக்கத்தில் கடன்தொல்லை காரணமாக கதிர்வேல் (78) வி‌ஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.


Next Story