புரட்டாசி 3–வது சனிக்கிழமையையொட்டி நவ திருப்பதி கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி 3–வது சனிக்கிழமையை முன்னிட்டு, நவ திருப்பதி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
தென்திருப்பேரை,
புரட்டாசி 3–வது சனிக்கிழமையை முன்னிட்டு, நவ திருப்பதி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
சிறப்பு வழிபாடுபுரட்டாசி மாத 3–வது சனிக்கிழமையை முன்னிட்டு, நவ திருப்பதி கோவில்களான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவில், நத்தம் விஜயாசன பெருமாள் கோவில், திருப்புளியங்குடி காய்சினவேந்தர் பெருமாள் கோவில், இரட்டை திருப்பதி அரவிந்தலோசனர் கோவில், சீனிவாச பெருமாள் கோவில், பெருங்குளம் மாயக்கூத்தர் கோவில், தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவில், திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவில், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் ஆகியவற்றில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.
கோவில்களில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தரிசனம், திருமஞ்சனம் நடந்தது. உற்சவர்கள் புஷ்ப அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பெரும்பாலான பக்தர்கள் கோவில் வளாகத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
கோவில்களில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. நெல்லை, தூத்துக்குடியில் இருந்து நவ திருப்பதி கோவில்களுக்கு ஒரே பஸ்சில் சென்று திரும்பி வரும் வகையில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர்கள் அஜித், விசுவநாத், கார்த்திக் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.
வைகுண்டபதி பெருமாள் கோவில்தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் நேற்று புரட்டாசி 3–வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி பெருமாள், பத்மாவதி தாயார் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதனால் நேற்று காலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசனம் செய்தனர்.
கோவில்பட்டி சுபா நகர் நித்ய கல்யாண வேங்கடேசுவர பெருமாள் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. காலையில் பக்தர்கள் வழங்கிய ஏராளமான காய்கறிகளால் வேங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இரவில் வேங்கடேச பெருமாள் சப்பரத்தில் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் பக்தர்களுக்கு காய்கறிகளை பிரசாதமாக வழங்கினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் கமிட்டி தலைவர் கனகராஜ் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் செய்து இருந்தனர்.