திருவண்ணாமலையில் ஆசிரியர் வீட்டில் 38 பவுன் நகை கொள்ளை


திருவண்ணாமலையில் ஆசிரியர் வீட்டில் 38 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 8 Oct 2017 4:30 AM IST (Updated: 7 Oct 2017 11:18 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் ஆசிரியர் வீட்டில் 38 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை,

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

திருவண்ணாமலை அண்ணாநகர் 9–வது தெருவை சேர்ந்தவர் வீரசேகரன் (வயது 41). மேல்செட்டிபட்டு அரசு மேல் நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி. இவர், வாணாபுரம் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். வீரசேகரன் குடும்பத்துடன் தற்போது வாணாபுரத்தில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீரசேகரன் வங்கியில் வைத்திருந்த 18 பவுன் நகையை மீட்டார். பின்னர் அவர், திருவண்ணாமலை அண்ணாநகரில் உள்ள வீட்டிற்கு வந்து, அந்த நகையை பீரோவில் வைத்துவிட்டு வாணாபுரத்திற்கு சென்றார். ஏற்கனவே பீரோவில் 20 பவுன் நகை வைத்ததாக தெரிகிறது.

நேற்று காலை வீரசேகரன் அண்ணாநகரில் உள்ள வீட்டிற்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. உடனே பீரோ இருக்கும் அறைக்கு சென்று பா£த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 38 பவுன் நகை மற்றும் ரூ.12 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து வீரசேகரன் திருவண்ணாமலை டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து கைரேகைகளை சேகரித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆசிரியர் வீட்டில் 38 பவுன் நகை மற்றும் ரூ.12 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story