மேல்மருவத்தூர் சுற்றுவட்டாரத்தில் வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய வாலிபர் கைது
மேல்மருவத்தூர் சுற்றுவட்டாரத்தில் வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பொருட்களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். வீடுகளில் திருட்டு காஞ்சீபுரம் மாவட்டம் மேல்மருவத்தூர், சித்தாமூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் ஆள் இல்லாத வீடுகளில் வீட்டின் பூட்டை உ
மதுராந்தகம்,
மேல்மருவத்தூர் சுற்றுவட்டாரத்தில் வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பொருட்களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் மேல்மருவத்தூர், சித்தாமூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் ஆள் இல்லாத வீடுகளில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பொருட்கள் திருட்டுபோவதாக போலீஸ் நிலையங்களில் புகார்கள் வந்தன.
இதனையடுத்து மதுராந்தகம் போலீஸ் துணை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் தலைமையில், இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், சப்–இன்ஸ்பெக்டர்கள் தாமோதரன், கிருஷ்ணமூர்த்தி, ரவி, தேவதாஸ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.
மேல்மருவத்தூரை அடுத்த சோத்துபாக்கம் பகுதியில் நேற்று சந்தேகப்படும்படி திரிந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். அவர் சென்னை கண்ணகி நகரை சேர்ந்த பிரபாகரன் (வயது 35) என்பதும், பல வீடுகளில் திருடியதும் தெரிந்தது. அவரை போலீஸ் நிலையம் கொண்டுசென்று தீவிர விசாரணை செய்தனர்.
சோத்துபாக்கம், பாலாஜி நகரை சேர்ந்த பிரவீன்குமார் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 2½ பவுன், சித்தாமூர் மேலகண்டையை சேர்ந்த பதாகத் வீட்டில் 2 பவுன், நீர்பேரை சேர்ந்த ராதாகிருஷ்ணன் வீட்டில் டி.வி., வெள்ளி பொருட்கள், பெருக்கருணையை சேர்ந்த செல்வராஜ் வீட்டில் 2½ பவுன், ஓம்சக்தி நகர் செல்வராஜ் வீட்டில் 2½ பவுன் ஆகியவற்றை திருடியதாக அவர் போலீசாரிடம் ஒப்புக்கொண்டார்.
அவரிடம் இருந்து 7½ பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் டி.வி. ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். போலீசார் அவரை மதுராந்தகம் குற்றவியல் நடுவர் நீதிபதி முன் ஆஜர்படுத்தி, மதுராந்தகம் கிளை சிறையில் அடைத்தனர்.
திருட்டு நடந்து 2 நாட்களிலேயே குற்றவாளியை பிடித்த போலீசாரை துணை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் வெகுவாக பாராட்டினார்.