குளச்சல் கல்வி மாவட்டம் உருவாக்க வேண்டும் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநாட்டில் தீர்மானம்


குளச்சல் கல்வி மாவட்டம் உருவாக்க வேண்டும் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநாட்டில் தீர்மானம்
x
தினத்தந்தி 8 Oct 2017 4:15 AM IST (Updated: 8 Oct 2017 2:08 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் புதிதாக குளச்சல் கல்வி மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாகர்கோவில்,

தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் குமரி மாவட்ட கிளையின் 5-வது மாநாடு நாகர்கோவிலில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தில் நேற்று நடந்தது. மாநாட்டுக்கு சங்க மாவட்ட தலைவர் அசோகன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் லலிதாம்பிகா வரவேற்று பேசினார். லிட்டில் பிளவர் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாவட்ட செயலாளர் ராயல் ஆறுமுகம் வேலை அறிக்கை படித்தார். பொருளாளர் பிரான்சிஸ் சேவியர் அறிக்கை சமர்ப்பித்தார்.

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் சுமதி மற்றும் பலர் வாழ்த்தி பேசினர். தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் ராஜகுமார் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். சங்க மாநில தலைவர் அப்பர் சிறப்புரையாற்றினர். முடிவில் ஜாண் ஹெர்பர்சிங் நன்றி கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

விலக்களிக்க வேண்டும்

*தமிழக அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதிய மாற்றத்தை அமல்படுத்தும்போது 1-1-2016 முதல் நிலுவைத்தொகையுடன் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கிய அனைத்துவித படிகளுடன் வழங்கிட தமிழக அரசை கேட்டுக்கொள்வது. *பள்ளிக்கல்வித்துறையில் இணை இயக்குனர், துணை இயக்குனர், உதவி இயக்குனர் உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட பணியிடங்களை உடனடியாக உருவாக்க வேண்டும்.

*2017- 2018-ம் கல்வியாண்டில் பள்ளிகளுக்குரிய விலையில்லா பொருட்களை நேரடியாக அலுவலக பணியாளர்கள் மூலம் பள்ளிகளுக்கு வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியதன் மூலம் அலுவலக பணியாளர்களின் உடலுக்கும், உயிருக்கும் ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே வேறு முகமை மூலம் இத்திட்டத்தை செயல்படுத்தவும், அமைச்சு பணியாளர்களுக்கு இத்திட்டத்தில் விலக்களிக்கவும் தமிழக அரசை வலியுறுத்துவது.

பழைய ஓய்வூதிய திட்டம்

*குழித்துறை மற்றும் தக்கலை கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட கிள்ளியூர் மற்றும் குருந்தங்கோடு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை தனியாக பிரித்து குளச்சலை தலைமையிடமாகக் கொண்டு புதிதாக குளச்சல் கல்வி மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்ந்திட தமிழக அரசு ஏகமனதாக கேட்டுக்கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Next Story