ரெயிலில் சாகசம் செய்த வாலிபருக்கு 5 நாள் சிறை
மும்பை குர்லா ரெயில் நிலையத்தின் 7–ம் எண் பிளாட்பாரத்தில் சம்பவத்தன்று ரெயில்வே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
மும்பை,
மும்பை குர்லா ரெயில் நிலையத்தின் 7–ம் எண் பிளாட்பாரத்தில் சம்பவத்தன்று ரெயில்வே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ரெயில் நிலையத்திற்குள் ஒரு மின்சார ரெயில் மெதுவாக சென்று கொண்டிருந்தது. அந்த ரெயிலின் வாசற்படியில் தொங்கி கொண்டு பயணம் செய்த வாலிபர் ஒருவர், பிளாட்பாரத்தில் காலை உரசியபடி சாகசம் செய்ததை போலீசார் கண்டனர். அப்போது ரெயில் சிக்னலுக்காக நின்றது. உடனே சாகசம் செய்த வாலிபரை ரெயில்வே போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில், அவர் குர்லா நேருநகரை சேர்ந்த அஷ்ரப் சேக்(வயது19) என்பது தெரியவந்தது.
அவரது செல்போனை பறிமுதல் செய்து பார்த்தபோது, அதில் அவர் வெவ்வேறு நேரங்களில் ரெயிலில் சாகசம் செய்த 50–க்கு மேற்பட்ட புகைப்படம் இருந்ததை பார்த்தனர். இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து ரெயில்வே கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். விசாரணை நடத்திய நீதிபதி, அஷ்ரப் சேக்விற்கு 5 நாள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.