மந்திரி தன்வீர் சேட் வீட்டின் மீது கல்வீச்சு பூந்தொட்டிகளை போட்டு உடைத்த 21 பேர் கைது


மந்திரி தன்வீர் சேட் வீட்டின் மீது கல்வீச்சு பூந்தொட்டிகளை போட்டு உடைத்த 21 பேர் கைது
x
தினத்தந்தி 8 Oct 2017 5:37 AM IST (Updated: 8 Oct 2017 5:36 AM IST)
t-max-icont-min-icon

ஆங்கில பள்ளிகள் திறக்க அனுமதி அளித்ததை கண்டித்து மந்திரி தன்வீர் சேட் வீட்டின் முன்பு கன்னட ரக்‌ஷனே வேதிகே அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெங்களூரு,

ஆங்கில பள்ளிகள் திறக்க அனுமதி அளித்ததை கண்டித்து மந்திரி தன்வீர் சேட் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட கன்னட ரக்‌ஷனே வேதிகே அமைப்பினர், அவரது வீட்டின் மீது கற்களை வீசி தாக்கியதுடன், பூந்தொட்டிகளை தூக்கி போட்டு உடைத்தார்கள். இதுதொடர்பாக 21 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூருவில் புதிதாக ஆங்கில பள்ளிகள் திறக்க அனுமதி அளித்ததை கண்டித்தும், ஆங்கில பள்ளிகளில் அதிகஅளவு கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க கோரியும், கர்நாடகத்தில் உள்ள கன்னட பள்ளிகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வலியுறுத்தியும் பெங்களூரு ரேஸ் கோர்ஸ் சாலையில் இருக்கும் தொடக்க மற்றும் உயர்நிலை பள்ளி துறை மந்திரி தன்வீர் சேட் வீட்டு முன்பு நேற்று கன்னட ரக்‌ஷனே வேதிகே அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

அப்போது புதிதாக ஆங்கில பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கிய மந்திரி தன்வீர் சேட்டுக்கு எதிராக அவர்கள் கோ‌ஷங்கள் போட்டனர். அந்த சந்தர்ப்பத்தில் மந்திரி தன்வீர் சேட் வீட்டில் இல்லை. பின்னர் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்ட கன்னட ரக்‌ஷனே வேதிகே அமைப்பினர் மந்திரியின் வீட்டிற்குள் நுழைந்தார்கள். வீட்டின் முன்பக்க வாசலில் நின்றபடி அவர்கள் தொடர்ந்து கோ‌ஷங்களை எழுப்பியபடி இருந்தார்கள்.

இந்த நிலையில், திடீரென்று மந்திரியின் வீட்டில் இருந்த பூந்தொட்டிகளை கீழே போட்டு போராட்டக்காரர்கள் உடைத்தார்கள். மேலும் பூந்தொட்டிகளையும், கற்களையும் மந்திரியின் வீட்டு கதவு, ஜன்னல்கள் மீது வீசினார்கள். இதில், ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது. மந்திரியின் வீட்டில் இருந்த 20–க்கும் மேற்பட்ட பூந்தொட்டிகளை போட்டு உடைத்தனர். இதுபற்றி அறிந்ததும் சம்பவ இடத்திற்கு ஐகிரவுண்டு போலீசார் விரைந்து வந்தார்கள்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட கன்னட ரக்‌ஷனே வேதிகே அமைப்பினரை அங்கிருந்து கலைந்து செல்லும்படி போலீசார் கூறினார்கள். ஆனால் அவர்கள் தொடர்ந்து கோ‌ஷங்களை எழுப்பியபடி இருந்தார்கள். இதையடுத்து, கன்னட ரக்‌ஷனே வேதிகே அமைப்பை சேர்ந்த 21 பேரை போலீசார் கைது செய்து, அங்கிருந்து அழைத்துச் சென்றார்கள். இந்த சம்பவம் பெங்களூருவில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து மந்திரி தன்வீர் சேட் நிருபர்களிடம் கூறுகையில், “பெங்களூருவில் புதிதாக ஆங்கில பள்ளிகள் திறக்க அனுமதி அளித்ததாகவும், கன்னட பள்ளிகளில் அடிப்படை வசதிகள் செய்யக்கோரியும் கன்னட ரக்‌ஷனே வேதிகே அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், எனது வீட்டில் இருந்த பூந்தொட்டிகளை போட்டு உடைத்திருக்கிறார்கள். இதில், பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை. ஏனெனில் மக்கள் பிரதிநிதிகள் எப்போதும் தங்களது பாதுகாப்புக்காக போலீசாரை வைத்து கொள்வதில்லை.

கன்னட பள்ளிகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று, இதற்கு முன்பாக கன்னட ரக்‌ஷனே வேதிகே அமைப்பினர் மனு எதுவும் என்னிடம் கொடுக்கவில்லை. அப்படி இருக்கையில் இந்த போராட்டம் தேவையற்றது. கன்னட பள்ளிகளின் மேம்பாட்டுக்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு எடுத்து வருகிறது,“ என்றார்.


Next Story