அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்: புதிய வாக்காளர்களாக சேர 4,556 பேர் விண்ணப்பித்துள்ளனர்


அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்: புதிய வாக்காளர்களாக சேர 4,556 பேர் விண்ணப்பித்துள்ளனர்
x
தினத்தந்தி 9 Oct 2017 4:15 AM IST (Updated: 9 Oct 2017 3:44 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளில் நடந்த வாக்காளர் சிறப்பு முகாமில் புதிய வாக்காளர் களாக சேர 4,556 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 3-ந் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் நடந்து வருகிறது. மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 2 ஆயிரத்து 324 வாக்குச்சாவடிகளிலும் விண்ணப்ப படிவம் வழங்கப்படுகிறது. பெயர் சேர்க்க படிவம்-6, பெயர் நீக்கம் செய்ய படிவம்-7, திருத்தம் செய்ய படிவம்-8, ஒரே தொகுதியில் முகவரி மாற்றம் செய்ய படிவம்-8ஏ ஆகிய படிவங்கள் வழங்கப்படுகிறது.

ஓட்டுச்சாவடி நிலை அலுவலரிடம் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து, தகுந்த ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. வருகிற ஜனவரி மாதம் 1-ந் தேதி 18 வயது பூர்த்தியாகும் நபர்கள் புதிய வாக்காளர்களாக பெயர் சேர்க்கலாம். நேற்று அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற்றது. திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நஞ்சப்பா ஆண்கள் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் முகாம் நடைபெற்றது. புதிய வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து தங்கள் பெயர்களை சேர்க்க விண்ணப்பித்தனர்.

6,280 பேர் விண்ணப்பித்தனர்

அதன்படி நேற்று நடந்த சிறப்பு முகாமில் புதிய வாக்காளர்களாக பெயர் சேர்க்க தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் 348 பேரும், காங்கேயம் தொகுதியில் 424 பேரும், அவினாசி தொகுதியில் 613 பேரும், திருப்பூர் வடக்கு தொகுதியில் 605 பேரும், திருப்பூர் தெற்கு தொகுதியில் 459 பேரும், பல்லடம் தொகுதியில் 974 பேரும், உடுமலை தொகுதியில் 650 பேரும் மடத்துக்குளம் தொகுதியில் 483 பேரும் என மொத்தம் 4 ஆயிரத்து 556 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இதுதவிர பெயர் நீக்கம் செய்ய மாவட்டத்தில் 366 பேரும், திருத்தம் செய்ய 890 பேரும், முகவரி மாற்றம் செய்ய 468 பேரும் விண்ணப்பித்துள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 6 ஆயிரத்து 280 பேர் சிறப்பு முகாமில் விண்ணப்பித்து இருக்கிறார்கள்.


Related Tags :
Next Story