வேலைவாய்ப்பு முகாம்: தேர்வான 782 பேருக்கு பணி உறுதி ஆணை அமைச்சர் வழங்கினார்


வேலைவாய்ப்பு முகாம்: தேர்வான 782 பேருக்கு பணி உறுதி ஆணை அமைச்சர் வழங்கினார்
x
தினத்தந்தி 9 Oct 2017 4:30 AM IST (Updated: 9 Oct 2017 3:46 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான 782 பேருக்கு பணி உறுதி ஆணையை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.

கடலூர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் மஞ்சக்குப்பம் புனித வளனார் கல்லூரி சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் கடலூரில் நேற்று நடைபெற்றது. இதில் 72 தனியார் நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டு நேர்காணல் நடத்தி தங்களுக்கு தேவையான பணியாட்களை தேர்வு செய்தனர். இதனை தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி உறுதி ஆணை வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

இதற்கு கடலூர் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை தாங்கினார். தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பல்வேறு பணிகளுக்காக தேர்வு செய்யப்பட்ட 782 பேருக்கு பணி உறுதி ஆணையை வழங்கி பேசியதாவது:-

மிகவும் பின்தங்கிய கடலூர் மாவட்டத்தில் கிராமப்புற பகுதிகளில் படித்து முடித்து வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள், இளம்பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தர வேண்டும் என்பதற்காக தமிழக அரசின் சார்பில் இந்த வேலைவாய்ப்பு முகாம் இங்கே நடக்கிறது. இதில் தேர்வானவர்களுக்கு பணி உறுதி ஆணை வழங்கப்பட்டுள்ளது. பணி ஆணை பெற்றவர்கள் நீங்கள் செல்லும் இடத்தில் சிறப்பாக பணிபுரிந்து அந்த நிறுவனத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும். உங்கள் திறமையை மென்மேலும் வளர்த்து உயர்ந்த நிலைக்கு வர வேண்டும். முகாமில் வேலை கிடைக்காதவர்கள் கவலைப்பட வேண்டாம். அடுத்த முகாமில் கலந்து கொள்ள நீங்கள் உங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் கருணாகரன், தொழில் மைய உதவி இயக்குனர் லட்சுமி, கல்லூரி செயலாளர் அருட்தந்தை பீட்டர் ராஜேந்திரம், செய்தி-மக்கள் தொடர்பு அதிகாரி ரவிச்சந்திரன், முன்னாள் நகரசபை தலைவர் குமரன், துணை தலைவர் சேவல்குமார், ஒன்றிய செயலாளர் பழனிசாமி, முன்னாள் கவுன்சிலர்கள் கந்தன், தமிழ்செல்வன் மற்றும் தனியார் நிறுவனத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

முகாமுக்கு வந்த அனைவருக்கும் கடலூர் அரசு மருத்துவமனை சார்பில் சித்த மருத்துவர் டாக்டர் செந்தில்குமார் தலைமையில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இதை ஏராளமான இளைஞர்களும், இளம்பெண்களும், தனியார் நிறுவன அதிகாரிகளும் வாங்கி பருகினர். 

Related Tags :
Next Story