கோவை மாவட்டத்தில் 2,892 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்


கோவை மாவட்டத்தில் 2,892 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 9 Oct 2017 4:15 AM IST (Updated: 9 Oct 2017 3:50 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 892 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நேற்று நடந்தது.

கோவை,

1.1.2018-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான முகாம் வருகிற 31-ந் தேதி வரை தமிழகம் முழுவதும் நடைபெறு கிறது. அதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்து 892 வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இதனால் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் ஒரு வாக்குச்சாவடி அலுவலர் பணியில் இருந்தார். மேலும் அங்கு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்களும் இருந்தனர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புபவர்கள் படிவம்-6 ஐ பூர்த்தி செய்து வாக்குச்சாவடி அலுவலரிடம் கொடுத்தனர். இதே போல பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம்-7-ம், ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றத்திற்கு படிவம்-8-ம், ஒரு தொகுதியில் இருந்து மற்றொரு தொகுதிக்கு மாறி முகவரி மாற்றம் செய்ய படிவம் 8 ஏ ஆகியவற்றை விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்து கொடுத்தனர்.

முகவரி சரிபார்ப்பு

அந்த படிவங்களுடன் இருப்பிடத்துக்கான ஆதாரங்களாக ரேஷன் கார்டு, சமையல் எரிவாயு ரசீது மற்றும் ஆதார் அட்டை நகல், 2 புகைப்படங்கள் ஆகியவற்றையும் விண்ணப்பதாரர்கள் கொடுத்தனர். அவற்றை வாக்குச் சாவடி அலுவலர்கள் அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்பி முகவரி யை சரிபார்த்த பின்னர் அவை சரியாக இருக்கும்பட்சத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப் படும். கோவை ராமநாதபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் ஏராளமான விண்ணப்பதாரர்கள் படிவங்களை கொடுத்தனர்.

இதில், கோவை ஆர்.எஸ்.புரம் அம்மணியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடந்த முகாமை கலெக்டர் ஹரிகரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், முகாமிற்கு வருபவர்களுக்கு அனைத்து படிவங்களும் முறையாக கிடைக்கிறதா? பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு வாக்குச்சாவடி அலுவலர் சரியான முறையில் பதில் அளிக்கிறார்களா? என்று முகாமிற்கு வந்தவர்களிடம் விசாரித்தார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

வாக்காளர் பெயர் சேர்க்கப்படும்

இதுகுறித்து கோவை தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் நேற்று நடந்த சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கொடுத்த விண்ணப்பங்கள் எத்தனை? என்பது இரண்டொரு நாட்களில் தெரியவரும். அந்த விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடந்த 3-ந் தேதி வெளியான வரைவு வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்காக அந்தந்த தாலுகா அலுவலகங்கள் மற்றும் உள்ளாட்சி அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளன.

அதை பொதுமக்கள் சரி பார்த்து தங்கள் பெயர் இல்லை என்றாலோ, மாறி இருந்தாலோ, திருத்தம் செய்ய வேண்டியிருந்தாலோ வருகிற 22-ந் தேதி நடக்கும் சிறப்பு முகாமில் அதற்கான விண்ணப்பங் களை கொடுக்கலாம். இது தவிர வருகிற 31-ந் தேதி வரை அந்தந்த பகுதிகளில் உள்ள தாலுகா அலுவலகங்களிலும் வாக்காளர் பெயர் சேர்க்க விண்ணப்பங்களை கொடுக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Tags :
Next Story