பெங்களூரு சிறையில் கைதிகள் தாக்கப்பட்ட சம்பவம்: மனித உரிமைகள் ஆணைய விசாரணையில் உறுதியானது
பெங்களூரு சிறையில் கைதிகள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தியது.
பெங்களூரு,
பெங்களூரு சிறையில் கைதிகள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தியது. இதில் கைதிகள் தாக்கப்பட்டது உறுதியானதை தொடர்ந்து முன்னாள் சிறை சூப்பிரண்டுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது.
ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுக்கொண்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் சிறையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா கடந்த ஜூலை மாதம் 12–ந் தேதி டி.ஜி.பி. சத்திய நாராயணராவுக்கு அறிக்கை கொடுத்தார். அதில் டி.ஜி.பி. சத்திய நாராயணராவுக்கும் தொடர்பு இருப்பதாக கூறி இருந்தார்.இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 16–ந் தேதி நள்ளிரவில் பரப்பனஅக்ரஹாரா சிறையில் இருந்த 32 கைதிகள் அதிரடியாக வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். அவர்கள், பெலகாவி இண்டல்கா, கலபுரகி, பல்லாரி சிறைகளில் அடைக்கப்பட்டனர். பெலகாவி இண்டல்கா சிறைக்கு இடம் மாற்றப்பட்ட கைதிகள் நொண்டி, நொண்டி சிறைக்குள் நடந்து சென்றனர். இந்த காட்சிகள் தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின. அதோடு கைதிகள் தாக்கப்பட்டதாக அவர்களது உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
இதுகுறித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. இதேபோல், தேசிய மனித உரிமைகள் ஆணையமும் சிறைத்துறையிடம் அறிக்கை கேட்டது. இதன் தொடர்ச்சியாக, கடந்த ஜூலை மாதம் 26–ந் தேதி மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் போலீஸ் ஐ.ஜி. சவ்மீண்டு முகர்ஜி பரப்பனஅக்ரஹாரா சிறையில் உள்ள கைதிகளிடமும், வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகளிடமும் தீவிர விசாரணை நடத்தினார்.மேலும், பரப்பனஅக்ரஹாரா சிறையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களும் ஆய்வு செய்யப்பட்டன.
விசாரணை நிறைவடைந்ததை தொடர்ந்து மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் ஐ.ஜி. சவ்மீண்டு முகர்ஜி அறிக்கை தாக்கல் செய்துள்ளார். 72 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் சிறை இடமாற்றத்துக்கு முந்தைய நாளில் பரப்பனஅக்ரஹாரா சிறையில் வைத்து கைதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாக உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.மேலும் அந்த அறிக்கையில், ‘‘கைதிகளின் சிறை மாற்றத்துக்கு முந்தைய நாளில் நடந்தது என்ன? என்பது குறித்து அறியும் வகையில் பரப்பனஅக்ரஹாரா சிறை கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, கைதிகள் சிலர் சக்கர நாற்காலியில்(வீல்–சேர்கள்) சிறையில் இருந்து அழைத்து செல்லப்படுவது தெரியவந்தது. சிறையில் நடந்த முறைகேடுகள் குறித்து புகார் அளித்ததாக கூறி கைதிகள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. புகார் அளித்த கைதிகள் ஒரு அறையில் வரிசையாக நிறுத்தப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளனர்’’ என்பன உள்பட பல்வேறு விவரங்கள் இடம்பெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுபற்றி, போலீஸ் ஐ.ஜி. சவ்மீண்டு முகர்ஜி கூறுகையில், ‘‘பரப்பனஅக்ரஹாரா சிறை மற்றும் அங்கிருந்து இடமாற்றப்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறைகளுக்கு சென்று விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்து உள்ளேன். இது முழுமையான விசாரணை அறிக்கையாகும்’’ என்றார். இதுகுறித்து மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவி மீரா சக்சேனா கூறுகையில், ‘‘கைதிகள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அது தொடர்பான அறிக்கை தற்போது கிடைத்து உள்ளது.’’ என்றார்.விசாரணை அறிக்கையில், கைதிகள் தாக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதை தொடர்ந்து பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறை தலைமை சூப்பிரண்டாக இருந்த கிருஷ்ணகுமாருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீசு அனுப்பி உள்ளது. அதில், வருகிற 23–ந் தேதி மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் ஆஜராகி சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
கைதிக்கு தொடர்ந்து தொல்லைபெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறை தலைமை சூப்பிரண்டாக பணியாற்றிய கிருஷ்ணகுமார், முறைகேடு புகார்களை தொடர்ந்து கலபுரகி சிறைக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் பரப்பனஅக்ரஹாரா சிறையில் இருந்த சிவக்குமார் என்ற கைதி கலபுரகி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதால், அங்கு வைத்தும் கைதி சிவக்குமாருக்கு பல்வேறு தொல்லைகளை அதிகாரி கிருஷ்ணகுமார் கொடுத்து வருவதாக மாநில மனித உரிமைகள் ஆணைய விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.