வெங்காய வியாபாரியை கடத்தி கொன்று, ரூ.6 லட்சத்தை பறித்தோம்


வெங்காய வியாபாரியை கடத்தி கொன்று, ரூ.6 லட்சத்தை பறித்தோம்
x
தினத்தந்தி 9 Oct 2017 5:33 AM IST (Updated: 9 Oct 2017 5:32 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவை சேர்ந்த வெங்காய வியாபாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் திருவண்ணாமலையை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை,

ஆந்திராவை சேர்ந்த வெங்காய வியாபாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் திருவண்ணாமலையை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலைகுறித்து அவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–

ஆந்திர மாநிலம் மாடிட்டி கிராமத்தை சேர்ந்தவர் மதுலேபி (வயது 58), வெங்காய வியாபாரி. இவர் கடந்த மாதம் 25–ந் தேதி வெங்காய வியாபாரம் தொடர்பாக வேலூரில் ரூ.2 லட்சம் வசூல் செய்துவிட்டு, திருவண்ணாமலையில் உள்ள வியாபாரிகளிடம் பணம் வசூல் செய்வதற்காக சென்றுள்ளார். பின்னர் அவர் ஊருக்கு செல்லவில்லை. அவரை குடும்பத்தினர் செல்போனில் தொடர்பு கொண்டபோது ‘சுவிட்ச் ஆப்’ என்று வந்துள்ளது அதைத் தொடர்ந்து இதுகுறித்து அவருடைய மகன் மதன்குமார் திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவின் பேரில் நிலஅகபரிப்பு தடுப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு பழனி தலைமையில் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் திருவண்ணாமலையை சேர்ந்த வியாபாரி குமார் (31), இம்தியாஸ் (24), சையது (25), தவுபிக் (22) ஆகிய 4 பேர் சேர்ந்து பணத்துக்காக மதுலேபியை கொலை செய்து பிணத்தை எரித்தது தெரியவந்தது. அவர்கள் 4 பேரையும் பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

அதன் விவரம் வருமாறு:–

பிடிபட்டவர்களில் குமார், திருவண்ணாமலை மண்டி தெருவில் வெங்காய மண்டி வைத்துள்ளார். மதுலேபி வேலூர், திருவண்ணாமலையில் பெரும்பாலான வெங்காய மண்டிகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய்க்கு வெங்காயம் வினியோகம் செய்யும் மொத்த வியாபாரி. இவரிடம் வெங்காயம் வாங்கிய குமார் ரூ.12 லட்சம் பாக்கி வைத்துள்ளார். சம்பவம் நடந்த கடந்த மாதம் 25–ந் தேதி வேலூர் வந்துவிட்டு திருவண்ணாமலை சென்ற மதுலேபி, அன்று இரவு குமாரை சந்தித்து பாக்கியை கேட்டுள்ளார். குமார், 4 லட்சம் ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளார். மீதித் தொகையை பிறகு தருவதாக கூறியுள்ளார். குமார் கொடுத்த பணம் மற்றும் வேலூரில் வசூல் செய்த ரூ.2 லட்சத்துடன் சேர்த்து, மொத்தம் ரூ. 6 லட்சத்தை மதுலேபி கையில் வைத்திருந்தார்.

கடந்த 30–ந் தேதி அந்த பணத்தை குமாரிடம் கொடுத்து, ‘‘இதை வைத்துக்கொள் மறுநாள் காலை ஊருக்கு செல்லும் போது, பெற்றுக் கொள்கிறேன்’’ என மதுலேபி தெரிவித்துள்ளார். அதற்கு குமார் தனது காரிலேயே ஆந்திரா அழைத்து செல்வதாக கூறினார். அதன்படி அவரை அழைத்து சென்று நடுவழில், ஆந்திர மாநிலம் புங்கனூரில் வைத்து மதுலேபியை கொன்று அவர் வைத்திருந்த பணம் ரூ.6 லட்சத்தை எடுத்துக்கொண்டு திருவண்ணாமலைக்கு வந்துள்ளனர். கொலைக்கு உடந்தையாக இருந்த தனது டிரைவர்கள் 2 பேருக்கும், அந்த பணத்தில் இருந்து தலா ரூ.50 ஆயிரம் பிரித்து கொடுத்துள்ளார்.

இதையடுத்து போலீசாரின் விசாரணை தீவிரமாக இருந்ததால் கடந்த 2–ந் தேதி குமார், மதுலேபியின் உடலை எரிக்க இம்தியாஸ், சையது, தவுபிக், பிரவீன் ஆகியோரை காரில் அனுப்பி வைத்தார். அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மதுலேபியின் உடலை எரித்து விட்டு வந்தனர். பின்னர் அவர்கள் ஒன்றும் தெரியாததை போல இருந்தனர். இந்த நிலையில் போலீசில் சிக்கி கொண்டனர்.

இதையடுத்து குமார் உள்ளிட்ட 4 பேரையும் திருவண்ணாமலை போலீசார், புங்கனூர் அழைத்து சென்று மதுலேபியை கொலை செய்து எரித்த இடத்தை பார்வையிட்டனர். அங்கு மதுலேபியின் எலும்புகளை கைப்பற்றி தடயவியல் ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். பிறகு குமார் உள்பட 4 பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பிரவீன் என்பவரை தேடி வருகின்றனர். அதுமட்டுமின்றி குற்றவாளிகளிடம் இருந்து ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்து 500 ரொக்கம், 2 கார், ஒரு செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story