சாலை போக்குவரத்துக்கழகம் கடனில் மூழ்கி தவிக்கிறது
முறைகேடுகளால் புதுச்சேரி சாலை போக்குவரத்துக்கழகம் கடனில் மூழ்கி தவிக்கிறது என்று மாநில பா.ஜ.க. தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.
புதுச்சேரி,
புதுவை அரசு சாலை போக்குவரத்துக் கழக பணிமனைக்கு மாநில பா.ஜ.க. தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் நேற்று காலை சென்றனர். அங்கு பொது மேலாளர் கிஷோர்குமாரை சந்தித்து சாலை போக்குவரத்து கழக பணிமனையில் உள்ள குறைகள் குறித்து பேசினர். பின்னர் நிருபர்களிடம் சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறியதாவது:–
புதுவை அரசு சாலை போக்குவரத்துக் கழகத்திற்கு மத்திய அரசிடம் இருந்து கிராமப்புற மக்களின் வசதிக்காக 50 பஸ்கள் வாங்கப்பட்டன. ஒதுக்கப்பட்ட வழித்தடங்களில் இயக்கப்படாமல் அந்த பஸ்கள் புதுவை பல்கலைக்கழக மாணவர்களுக்காக இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கான வழித்தடங்களில் இயக்க வேண்டும். தற்போது தற்காலிக பணியாளர்களாக வேலை செய்பவர்களை நீக்கி விட்டு புதிதாக ஆட்களை நியமிக்க வேலை நடந்து வருவதாக தெரிகிறது. இதனை பா.ஜ.க. வன்மையாக கண்டிக்கிறது. தேவைப்பட்டால் அரசு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக புதிய ஆட்களை எடுக்க வேண்டும்.
புதுவை அரசு சாலை போக்குவரத்து கழகத்தில் 143 பஸ்கள் உள்ளன. இந்த பணிமனையில் 800 பேர் வேலை செய்கின்றனர். இவர்களில் பெரும்பாலான டிரைவர்கள் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறை வாகனங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றனர். அவர்களுக்கு சாலை போக்குவரத்துக் கழகம் மூலம் சம்பளம் வழங்கப்படுகிறது. இதற்காக மாதம் ரூ.15 லட்சம் கூடுதலாக செலவு செய்யப்படுகிறது.
சாலை போக்குவரத்துக் கழகத்திற்கு ரூ.10 கோடிக்கு மேல் கடன் உள்ளது. டயர்கள் வாங்க முடியாமல் பல பஸ்கள் பணி மனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆட்சியாளர்களின் அலட்சியப் போக்கால் சாலை போக்குவரத்துக்கழகம் மூழ்கும் அபாயத்தில் உள்ளது. இந்த நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன. இதனை அரசு உடனடியாக சரி செய்ய வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பா.ஜ.க. சார்பில் அரசு சாலை போக்குவரத்துக் கழகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.