பதிவு எண் வழங்க ரூ.3,800 லஞ்சம்; மோட்டார் வாகன ஆய்வாளர் கைது


பதிவு எண் வழங்க ரூ.3,800 லஞ்சம்; மோட்டார் வாகன ஆய்வாளர் கைது
x
தினத்தந்தி 9 Oct 2017 11:15 PM GMT (Updated: 9 Oct 2017 9:09 PM GMT)

சேலம் அருகே மோட்டார் வாகனத்திற்கு ‘பேன்சி‘ பதிவு எண் வழங்க ரூ.3 ஆயிரத்து 800 லஞ்சம் வாங்கியதாக மோட்டார் வாகன ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

ஓமலூர்,

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள வெள்ளாளகுந்தம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 45). இவர் சேலம் அருகே ஓமலூரில் மேச்சேரி பிரிவு ரோட்டில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஆய்வாளராக உள்ளார்.

இவர் புதிய மோட்டார் வாகன எண் பதிவுக்கும், விபத்து வண்டிகளுக்கு காப்பீடு தொடர்பான ஆய்வுக்கும் அதிகளவில் லஞ்சம் கேட்பதாக புகார்கள் கூறப்பட்டன. இந்த நிலையில் சென்னையில் உள்ள தனியார் புகையிலை நிறுவனத்தில் ஏரியா மேலாளராக பணிபுரிந்து வரும் ஓமலூரை சேர்ந்த ஜாபர் சாதிக் அலி (36) என்பவர் புதிதாக வாங்கிய புல்லட் மோட்டார் வாகனத்திற்கு பேன்சி பதிவு எண் கேட்டு ஓமலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமாரை தொடர்பு கொண்டுள்ளார்.

அதற்கு அவர் பேன்சி ரக ஒதுக்கீட்டில் பதிவு எண் வழங்க கூடுதல் கட்டணம் ஆகும் என்பதால், அவ்வாறு இல்லாமல் வழக்கமான நடைமுறையிலேயே ரேண்டம் ஒதுக்கீட்டில் பேன்சியான எண்ணை பெற்று தருவதாகவும், அதற்கு லஞ்சம் கேட்டதாகவும் தெரிகிறது.

ஆனால், லஞ்சம் வழங்க விரும்பாத ஜாபர் சாதிக் அலி இது தொடர்பாக சேலம் லஞ்சஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமாரை கையும், களவுமாக பிடிக்க லஞ்சஒழிப்பு போலீசார் திட்டமிட்டனர். அதன்படி நேற்று பகல் 12 மணியளவில் ஜாபர் சாதிக் அலியிடம், ரசாயன பவுடர் தடவிய 3 ஆயிரத்து 800 ரூபாய் நோட்டுகளை போலீசார் கொடுத்து அனுப்பினர்.

அவரும் ஓமலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு அந்த பணத்தை கொண்டு சென்று சிவக்குமாரிடம் கொடுத்தார். அப்போது அந்த அலுவலகத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு சந்திரமவுலி மற்றும் போலீசார் கையும், களவுமாக சிவக்குமாரை கைது செய்தனர். பின்னர் அந்த அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் பல்வேறு ஆவணங்களை ஆய்வு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் ஓமலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Related Tags :
Next Story