கோவிலின் பூட்டை உடைத்து 3 ஐம்பொன் சிலைகள் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


கோவிலின் பூட்டை உடைத்து 3 ஐம்பொன் சிலைகள் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 9 Oct 2017 11:00 PM GMT (Updated: 9 Oct 2017 9:09 PM GMT)

ஆம்பூர் அருகே கோவிலின் பூட்டை உடைத்து 3 ஐம்பொன் சிலைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆம்பூர்,

ஆம்பூர் அருகே உள்ள பள்ளிகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட பூமாலை கிராமத்தில் மலை மீது பழமை வாய்ந்த முருகன் கோவில் உள்ளது. கோவிலுக்கு பூமாலை, பள்ளிகுப்பம், அகரம்சேரி, கருங்காலி, திருமலைகுப்பம், பாலூர் உள்ளிட்ட 7 கிராம மக்கள் தினமும் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

மேலும் கிருத்திகை நாட்களிலும், ஆடி மாதமும் சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம். பழமை வாய்ந்த இக்கோவிலில் கடந்த 1989-ம் ஆண்டு ஐம்பொன்களால் ஆன முருகர், வள்ளி, தெய்வானை சிலைகள் வைக்கப்பட்டு பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவில் பூசாரி நடேசன் கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று கிருத்திகை என்பதால் அவர் பூஜை பொருட்கள் வாங்குவதற்காக, பற்குணம் என்பவரிடம் கோவில் சாவியை கொடுத்து கோவிலை திறக்கும்படி கூறியுள்ளார்.

இதனையடுத்து அவர், கோவிலுக்கு சென்று பார்த்தபோது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, கருவறையில் இருந்த 3 அடி உயரமுள்ள முருகர், 2½ அடி உயரமுள்ள வள்ளி, தெய்வானை ஆகிய 3 ஐம்பொன் சிலைகளும், மேலும் ஐம்பொன்னால் ஆன சேவல்கொடி, வேல் மற்றும் வெள்ளிப் பொருட்களையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து கோவில் பூசாரி நடேசன் ஆம்பூர் தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

கோவிலில் கொள்ளைபோன ஐம்பொன் சிலைகளின் மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும் என கூறப்படுகிறது. 

Related Tags :
Next Story