வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பாலம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது


வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பாலம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது
x
தினத்தந்தி 10 Oct 2017 4:30 AM IST (Updated: 10 Oct 2017 2:39 AM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் அருகே கொட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பாலம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.

குடியாத்தம்,

குடியாத்தம் ஒன்றியம் தனகொண்டபல்லி ஊராட்சி ஆந்திர மாநில எல்லையோரம் அமைந்துள்ளது. ஆந்திர மாநில எல்லையோர பகுதிகளில் மழை பெய்ததன் காரணமாக தமிழக எல்லையோர கிராமங்களில் உள்ள கொட்டாற்று பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தனகொண்டபல்லி கிராமத்திற்கும், மேல்கொல்லப்பல்லி கிராமத்திற்கும் இடையே செல்லும் கொட்டாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக மேல்கொல்லப்பல்லி கிராமம் தனியாக துண்டிக்கப்பட்டது. அப்பகுதி பள்ளி மாணவர்களும், விவசாயிகளும் கிராமத்தை விட்டு வெளியே வரமுடியாதபடி பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இதனைதொடர்ந்து மாவட்ட கலெக்டர் எஸ்.ஏ.ராமன் உத்தரவின்பேரில், ஊரக வளர்ச்சி துறை சார்பில் கரூரில் இருந்து கொண்டு வரப்பட்ட 12 ராட்சத சிமெண்டு பைப்புகள் மூலம் மேல்கொல்லப்பல்லி கொட்டாற்றில் தற்காலிக பாலம் அமைக்க கடந்த 3 நாட்களாக பணி நடைபெற்றது. சிமெண்டு பைப்களை சுற்றிலும் மணல் மூட்டைகள் அடுக்கி தற்காலிக பாலம் தயாரானது. நேற்று முன்தினம் மாலையில் பாலம் வழியாக மக்கள் சென்று வந்தனர்.

அதிகாரிகள் ஆய்வு

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் கொட்டாற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக தற்காலிக பாலத்தின் மணல் மூட்டைகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. மேலும் சிமெண்டு பைப்புகள் தண்ணீரில்இழுத்து செல்லப்பட்டன. இதனால் பொதுமக்கள் கொட்டாற்றை கடக்க முடியாமல் தவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஊரக வளர்ச்சித்துறை மாவட்ட திட்ட இயக்குனர் பி.பெரியசாமி, ஊரக வளர்ச்சித்துறை திருப்பத்தூர் கோட்ட செயற் பொறியாளர் ராஜவேலு, தாசில்தார் நாகம்மாள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சி.ரகு, எஸ்.ஆனந்த், ஒன்றிய பொறியாளர் முகமதுநவாஸ் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து கொட்டாற்றில் மீண்டும் தற்காலிக பாலம் அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினர். அதைத் தொடர்ந்து தற்காலிக பாலம் அமைக்கும் பணி மீண்டும் தொடங்கியது. 

Related Tags :
Next Story