பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் நோயாளியை வெளியேற்றியதாக புகார்
பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில், தொழுநோய் பிரிவில் கேரள மாநிலத்தை சேர்ந்த சுமார் 75 வயது மதிக்கத்தக்க ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார். அவருடன் இருந்து கவனிக்க உறவினர்கள் யாரும் இல்லை என கூறப்படுகிறது.
நெல்லை,
பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில், தொழுநோய் பிரிவில் கேரள மாநிலத்தை சேர்ந்த சுமார் 75 வயது மதிக்கத்தக்க ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார். அவருடன் இருந்து கவனிக்க உறவினர்கள் யாரும் இல்லை என கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அவரை ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேற்றியதாக புகார் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள ஒரு மரத்தின் அடியில் படுத்து இருந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர். அவர்கள் இது குறித்து தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினரிடம் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் விரைந்து சென்று அந்த நோயாளியை மீட்டு மீண்டும் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்கவேண்டும் என்று ஆஸ்பத்திரி டீனை சந்தித்து கோரிக்கை வைத்தனர். இதை ஏற்று மீண்டும் அவர் மீண்டும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் ஆஸ்பத்திரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.