தலித் அமைப்புகளின் போராட்டக்குழு சார்பில் கிரண்பெடிக்கு எதிராக உண்ணாவிரதம்


தலித் அமைப்புகளின் போராட்டக்குழு சார்பில் கிரண்பெடிக்கு எதிராக உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 12 Oct 2017 3:30 AM IST (Updated: 12 Oct 2017 1:53 AM IST)
t-max-icont-min-icon

கவர்னர் கிரண்பெடிக்கு எதிராக தலித் அமைப்புகளின் போராட்டக்குழு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

புதுச்சேரி,

புதுவை கவர்னராக உள்ள கிரண்பெடிக்கும், புதுவை அமைச்சரவைக்கும் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது. ஆதிதிராவிட மக்களின் நலத்திட்டங்களை முடக்குவதாக அமைச்சர் கந்தசாமியும் குற்றஞ்சாட்டி இருந்தார்.

இந்தநிலையில் தலித் மாணவர்களின் இலவச கல்வி திட்டத்திற்கு காங்கிரஸ் அரசு அனுப்பிய கோப்பை ரத்து செய்து திருப்பி அனுப்பி விட்டதாகவும், ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதிகளில் 131 ஹைமாஸ் மற்றும் மினிமாஸ் விளக்குகள் அமைத்ததை சகித்துக்கொள்ளாமல் அமைச்சர் கந்தசாமி மீது சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்திருப்பதாகவும் புதுவை மாநில அனைத்து தலித் அமைப்புகளின் போராட்டக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது.

உண்ணாவிரதம்

ஆதிதிராவிடர்களின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த திட்டங்களை முடக்கிவிட்டதாகவும், ஆதிதிராவிட அதிகாரிகளை கவர்னர் மிரட்டுவதாகவும், தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் வேட்டி, சேலை வாங்கும் நிதியை முடக்கி வைத்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையொட்டி புதுவை மாநில அனைத்து தலித் அமைப்புகளின் போராட்டக்குழு சார்பில் கவர்னரை கண்டித்தும், அவரை மத்திய அரசு திரும்பப்பெறக்கோரியும் தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டக்குழு தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நீல.கங்காதரன் தலைமை தாங்கினார்.

எம்.எல்.ஏ.க்கள்

உண்ணாவிரதத்தை எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், அனந்தராமன், தீப்பாய்ந்தான், சிவா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், வடக்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் விசுவநாதன், தேசியக்குழு உறுப்பினர் நாரா.கலைநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம் உள்பல பலர் வாழ்த்திப் பேசினார்கள்.

இந்த உண்ணாவிரதத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். கவர்னர் மாளிகையை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


Next Story