சித்தூரில் பலத்த மழை திருவள்ளூர் மாவட்ட கிராமத்தில் வெள்ளம் புகுந்தது


சித்தூரில் பலத்த மழை திருவள்ளூர் மாவட்ட கிராமத்தில் வெள்ளம் புகுந்தது
x
தினத்தந்தி 11 Oct 2017 10:45 PM GMT (Updated: 2017-10-12T02:18:09+05:30)

சித்தூரில் பலத்த மழை பெய்து வருவதால் திருவள்ளூர் மாவட்ட கிராமத்தில் வெள்ளம் புகுந்தது.

பள்ளிப்பட்டு,

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அம்மப்பள்ளியில் உள்ள அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதற்கிடையே சித்தூர் மாவட்டத்தில் இருந்து வெளியேறிய மழை வெள்ளம் கால்வாய் வழியாக திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையை அடுத்த தேவலம்பாபுரம் கிராமத்துக்குள் நேற்றுமுன்தினம் இரவு புகுந்தது.

சுமார் 150 வீடுகளை இந்த வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். நேரம் செல்ல செல்ல கிராமத்துக்குள் தண்ணீர் வரத்து மேலும் அதிகமானது.

இதைத்தொடர்ந்து கிராம மக்கள் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். தகவல் அறிந்ததும் திருத்தணி தொகுதி எம்.எல்.ஏ. நரசிம்மன், ஆர்.டி.ஓ. ஜெயராமன், தாசில்தார் தமிழ்ச்செல்வி மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்தனர்.

கிராமத்தினர் அனைவரையும் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தினர். பின்னர் அவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தனர்.

நேற்று காலை கிராமத்துக்குள் புகுந்த வெள்ளம் வடிந்தது. மேலும் சித்தூரில் பலத்த மழை பெய்ததால் மீண்டும் காட்டாற்று வெள்ளம் கிராமத்துக்குள் புகுந்து விடுமோ என்று பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மழை வெள்ளம் வரும் பகுதியில் கால்வாய் அருகே தடுப்பணை கட்டினால் திடீர் வெள்ளத்தை சமாளிக்க முடியும் என்று கிராமமக்கள் தெரிவித்தனர்.


Next Story