மேட்டூரில் ரூ.16 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் காவல் துறைக்கான புதிய கட்டிடங்கள்


மேட்டூரில் ரூ.16 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் காவல் துறைக்கான புதிய கட்டிடங்கள்
x
தினத்தந்தி 12 Oct 2017 4:15 AM IST (Updated: 12 Oct 2017 3:29 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூரில் ரூ.16 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் காவல்துறைக்கான புதிய கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

மேட்டூர்,

மேட்டூரில் ரூ.12 கோடியே 71 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நிரந்தர காவல் பயிற்சிப்பள்ளி, ரூ.75 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நிரந்தர காவல் பயிற்சிப் பள்ளிக்கான நிர்வாகக்கட்டிடம், ரூ.3 கோடியே 20 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 200 காவலர்களுக்கான பாளையம் என மொத்தம் ரூ.16 கோடியே 68 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல்துறை கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி நேற்று சென்னையில் இருந்தபடி காணொலி காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

மேட்டூரில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ரோகிணி, சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன், சென்னை காவலர் பயிற்சி பள்ளி சூப்பிரண்டு மணி, போலீஸ் சூப்பிரண்டு சேவியர் பிரான்சிஸ், பயிற்சி பள்ளி துணை முதல்வர் பாலகிருஷ்ணன், மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ. செம்மலை, மேட்டூர் நகர கூட்டுறவு வங்கி தலைவர் சந்திரசேகரன், மேட்டூர் நகர்மன்ற முன்னாள் தலைவர் லலிதா சரவணன், முன்னாள் துணைத்தலைவர் ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். காணொலி காட்சியில் சேலம் கலெக்டர் ரோகிணி, காவல்துறைக்கான கட்டிடங்களை திறந்து வைத்தமைக்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து பேசினார்.

ஜெயலலிதா வழியில்..

விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,“மாநிலத்தின் அமைதியை பேணிப் பாதுகாப்பது, சட்டம்-ஒழுங்கை பராமரிப்பது, குற்றங்கள் நிகழாமல் தடுப்பது, குற்றவாளிகளை கண்டுபிடித்து தக்க தண்டனை பெற்று கொடுப்பது போன்ற பல்வேறு முக்கிய பணிகளை காவல்துறை ஆற்றி வருகின்றது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த காவல்துறையின் பணிகள் மேலும் சிறக்க, புதிய காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகளை கட்டுதல், காவல்துறை அலுவலகங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ரோந்து பணிகளை மேற்கொள்ள புதிய வாகனங்களை வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது“ என்றார்.

சென்னையில் நடந்த காணொலி காட்சி நிகழ்ச்சியில் சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி. சண்முகம், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் நிரஞ்சன் மார்டி, காவல்துறை தலைமை இயக்குனர் டி.கே. ராஜேந்திரன், தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தமிழ்செல்வன் உள்பட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story