நிலுவை சம்பளத்தை வழங்கக்கோரி பாசிக் ஊழியர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்
நிலுவையிலுள்ள சம்பளத்தை வழங்கக்கோரி பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்திய பாசிக் ஊழியர்கள் 217 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி,
புதுச்சேரி அரசின் கூட்டுறவு சார்பு நிறுவனமான பாசிக் சார்பில் காய்கறி, உரம், கேண்டீன், பெட்ரோல் பங்க், மதுபான விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த நிறுவனங்களில் 350 நிரந்தர தொழிலாளர்களும், 600க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்களும் உள்ளனர். இவர்களுக்கு 40 மாதங்களாக சம்பளம் வழங்கப்பட வில்லை என்று தெரிகிறது.
நிலுவையில் உள்ள இந்த சம்பளத்தை வழங்க வேண்டும், தினக்கூலி ஊழியர்களாக 15 ஆண்டுகளாக பணி புரிந்தவர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், நிரந்தர ஊழியர்களுக்கு முழு சம்பளத்தையும் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று காலை தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ராஜீவ்காந்தி சிலை அருகே அவர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர். சங்க செயலாளர் முத்து தலைமை தாங்கினார். தலைவர் அப்துல்லா கான், துணைத் தலைவர் ரமேஷ், துணை செயலாளர் கோவிந்தராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏ.ஐ.டி.யு.சி. மாநில தலைவர் அபிஷேகம், செயலாளர் சேதுசெல்வம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இதுபற்றி தகவல் அறிந்து கோரிமேடு போலீசார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவர்கள் போராட்டத்தினை கைவிடவில்லை. இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 217 பேரை கைது செய்தனர்.