வீட்டின் கதவை உடைத்து 16½ பவுன் நகைகள் கொள்ளை பட்டப்பகலில் மர்மநபர்கள் கைவரிசை
தூத்துக்குடியில் பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து 16½ பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று உள்ளனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி செயின்ட் மேரீஸ் காலனி முதல் தெருவை சேர்ந்தவர் அந்தோணி டோவின். இவருடைய மனைவி நிஷா (வயது 31). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்களது வீட்டின் தரை தளத்தில் மளிகை கடை உள்ளிட்ட சில கடைகள் இயங்கி வருகின்றன. அந்தோணி டோவின் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இதனால் வீட்டில் நிஷா தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.
நேற்று காலையில் நிஷா குழந்தைகள் பள்ளிக்கு சென்ற பின்னர், அதே பகுதியை சேர்ந்த தனது தோழியான பால சரசுவதி என்பவருடன் தூத்துக்குடி பஜாரில் புதுதுணிகள் எடுக்க சென்றார். துணிகள் எடுத்து விட்டு மதியம் 1 மணிக்கு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, மர்மநபர்கள் பீரோவை இரும்பு கம்பியால் உடைத்து, அதில் இருந்த தங்க சங்கிலி, கம்மல், நெக்லஸ் உள்ளிட்ட 16½ பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதாராணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பட்டப்பகலில் வீடு புகுந்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.