கர்நாடக மாநிலம் முழுவதும் பலத்த மழை சிறுமிகள் உள்பட 6 பேர் பலி ஏரி உடைந்து பயிர்கள் நாசம்


கர்நாடக மாநிலம் முழுவதும் பலத்த மழை சிறுமிகள் உள்பட 6 பேர் பலி ஏரி உடைந்து பயிர்கள் நாசம்
x
தினத்தந்தி 15 Oct 2017 11:45 PM GMT (Updated: 15 Oct 2017 9:46 PM GMT)

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவ மழை கடந்த 2 மாதங்களாக தீவிரம் அடைந்து கொட்டி தீர்த்து வருகிறது.

பெங்களூரு,

இந்த நிலையில் பெங்களூருவில் கடந்த 13-ந் தேதி இரவு ஒரு மணி நேரம் மழை ருத்ரதாண்டவம் ஆடியது. இதனால் நகரின் பல பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. குருபரஹள்ளி, சாம்ராஜ்பேட்டை உள்பட பல பகுதிகளில் உள்ள கால்வாய்களில் நிரம்பிய மழைநீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. இந்த கனமழைக்கு 3 பெண்கள் உள்பட 5 பேர் மரணம் அடைந்தனர். இதில் 3 பேர் கால்வாயில் அடித்து செல்லப்பட்டும், மற்ற 2 பேர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தும் மரணம் அடைந்தனர். மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்-மந்திரி சித்தராமையா நேரில் சென்று பார்வையிட்டார்.

கால்வாயில் அடித்து செல்லப்பட்டவர்களில் அர்ச்சகர் வாசுதேவ் பட்டின் (வயது 47) உடல் நேற்று முன்தினம் மீட்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை புஷ்பா (22) என்ற பெண்ணின் உடல் கும்பலகோடு பகுதியில் உள்ள கால்வாயில் கிடந்ததை தீயணைப்பு படையினர் கண்டுபிடித்து மீட்டனர். அவருடைய தாயார் நிங்கம்மாவின் உடல் இன்னும் கிடைக்கவில்லை. அதற்காக தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மழைநீர் புகுந்த குடியிருப்பு பகுதிகளில் இன்னும் தண்ணீர் வடியவில்லை. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் வீட்டு உபயோகப் பொருட்கள் மூழ்கி சேதமடைந்தன. மேலும் மாணவ-மாணவிகளின் புத்தக பைகளும் மழைநீரில் மூழ்கின. இதனால் நேற்று தண்ணீரில் நனைந்த வீட்டு உபயோக பொருட்களை பாதிக்கப்பட்ட மக்கள் உலர வைத்தனர். மேலும் மாணவ-மாணவிகளும் நடுரோட்டில் புத்தகங்களை உலர வைத்த காட்சிகளை காண முடிந்தது. அத்துடன் வீடுகளில் புகுந்த நீரையும் மக்கள் வெளியேற்றினர்.
மேலும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நின்ற மழை நீரை, மின்மோட்டார் மூலம் மாநகராட்சி ஊழியர்கள் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். அத்துடன் சாலைகளில் ஏற்பட்ட பள்ளங்களை தற்காலிகமாக மூடும் பணியும் நேற்று நடந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவும் பெங்களூருவில் கனமழை கொட்டியது. இரவு 10 மணிக்கு தொடங்கிய மழை தொடர்ந்து பெய்தபடி இருந்தது. இதனால் எச்.எஸ்.ஆர்.லே-அவுட், கோரமங்களா, நாயண்டஹள்ளி, எலகங்கா உள்பட பல பகுதிகள் வெள்ளக்காடானது. அடுக்குமாடி குடியிருப்புகளில் முதல் மாடி வரை தண்ணீர் தேங்கியது. அதனால் அந்த கட்டிடங்களில் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் தவியாய் தவித்துப்போயினர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழைக்கு பையப்பனஹள்ளி கிருஷ்ணப்பா கார்டன் பகுதியில் உள்ள கால்வாயில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதேப் பகுதியை சேர்ந்த நரசம்மா(16) என்ற சிறுமி அந்த கால்வாயில் தவறி விழுந்தாள். கால்வாயில் ஓடிய மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டு அவள் பரிதாபமாக உயிரிழந்தாள். அவளது உடல் நேற்று மீட்கப்பட்டது. மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மருத்துவர்கள் குழு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அந்த மக்களின் உடல் ஆரோக்கியம் குறித்து பரிசோதனை நடத்தினர். மேலும் விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர்.

அதே போல் பெங்களூரு தவிர ராமநகர், மைசூரு, மண்டியா, ஹாசன், உடுப்பி உள்பட மாநிலத்தின் பிற பகுதிகளிலும் மழை கொட்டி வருகிறது. ராமநகர் (மாவட்டம்) புறநகர் பகுதியில் உள்ள ஒரு ஆற்றில் மழைவெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மழைநீர் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் காட்சியை நந்தீஸ்(38) என்பவர் தனது செல்போன் கேமராவில் படம் பிடித்தார். அப்போது அதில் தவறி விழுந்த அவர் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.
பீதர் மாவட்டத்தில் காடியாள கிராமத்தை சேர்ந்த அவினாஷ் திப்பண்ணா(23) மழை பெய்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். தாவணகெரேயில் மழை பெய்து கொண்டிருந்தபோது சாலை குழியில் விழுந்து ஒரு சிறுமி மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது.

மேலும் ஹாசனில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் ஹாசன் அருகே உள்ள பித்தகவுடனஹள்ளி ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த ஏரி திடீரென்று உடைந்தது. இதனால் ஏரியில் இருந்து வெளியேறிய தண்ணீர், அருகே இருந்த 50 ஏக்கர் விவசாய நிலங்களுக்குள் புகுந்தது. இதனால் 50 ஏக்கரில் பயிரிட்டிருந்த மஞ்சள், இஞ்சி போன்ற பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகின. இதனால் விவசாயிகள் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஹாசன் வருவாய் துறை அதிகாரி, கிராம பஞ்சாயத்து தலைவர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தக்க நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

கோலார் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால், பேத்தமங்களா தடுப்பணையும் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிரம்பியது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கோலார் டவுன் மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் அம்மனகெரே ஏரி 13 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நிரம்பியது. தற்போது, அந்த ஏரியில் இருந்து தண்ணீர் நிரம்பி வழிந்தோடுகிறது. 13 ஆண்டுகளுக்கு பிறகு அம்மனகெரே ஏரி நிரம்பியதால், அந்தப்பகுதி மக்களும், விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோலார் மாவட்டம் மாலூரில் பெய்த பலத்த மழைக்கு நேற்று முன்தினம் அலகெம்பனஹள்ளி பகுதியில் உள்ள ஒரு வீடு இடிந்து விழுந்தது. இதில், வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த விவசாயியான திப்பண்ணா (65) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதேபோல, மாலூர் டவுன் அக்ரஹாரா பகுதியை சேர்ந்த பூ வியாபாரியான நரேந்திரா (35) என்பவர் அந்தப்பகுதியில் உள்ள கால்வாயை கடந்து செல்ல முயன்றார். அப்போது கால்வாயில் அதிகளவு தண்ணீர் வந்ததால், அவர் கால்வாயில் அடித்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். கர்நாடகத்தில் ஏற்கனவே மழைக்கு 10-க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் கர்நாடகத்தில் நேற்று முன்தினம் பெய்த மழைக்கு சிறுமிகள் உள்பட 6 பேர் பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் பெங்களூருவில் லேசான மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பெங்களூரு மக்களின் இயல்புவாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் கர்நாடகத்தில் அதிகபட்சமாக உடுப்பி மாவட்டம் கொல்லூரில் 180 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அதே மாவட்டம் கோடா, கார்கலாவில் 130, மூடுபித்ரி, குந்தாபூரில் 100, ஷரவணபெலகோலா (ஹாசன்)- 80, துமகூரு- 70, பெங்களூரு- 90 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.


Next Story