பாறைக்குழி தண்ணீரில் மூழ்கி பள்ளி மாணவன் பலி நண்பர்களுடன் குளிக்க சென்றபோது பரிதாபம்


பாறைக்குழி தண்ணீரில் மூழ்கி பள்ளி மாணவன் பலி நண்பர்களுடன் குளிக்க சென்றபோது பரிதாபம்
x
தினத்தந்தி 15 Oct 2017 11:00 PM GMT (Updated: 2017-10-16T03:20:30+05:30)

திருப்பூரில் நண்பர்களுடன் குளிக்க சென்ற போது பாறைக்குழி தண்ணீரில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக பலியானான்.

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் 4 செட்டிபாளையத்தை அடுத்த தியாகி குமரன் காலனியை சேர்ந்தவர் நசீர். இவரது மனைவி நிலாவர் நிஷா (வயது 30). இவர்களது மகன்கள் அனாஸ் (10), ஆரீஸ் (7). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நசீர் இறந்துவிட்டார். அனாஸ் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளி விடுமுறை என்பதால் அனாஸ் திருப்பூர் அங்கேரிபாளையம் ரோட்டில் உள்ள ஒரு பாறைக்குழியில் தேங்கி நின்ற தண்ணீரில் தன்னுடன் பள்ளியில் படிக்கும் நண்பர்கள் 2 பேருடன் குளிக்க சென்றான். நண்பர்கள் 2 பேரும் முதலில் பாறைக்குழி தண்ணீரில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தனர். நீச்சல் தெரியாததால் பாறைக்குழிக்கு வெளியே அனாஸ் நின்று கொண்டிருந்தான். சிறிது நேரத்திற்கு பிறகு அனாசுக்கும் நண்பர்களுடன் சேர்ந்து குளிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இதனால் அவனும் பாறைக்குழிக்குள் இறங்கினான்.

ஆனால் தண்ணீரின் அளவு அதிகமாக இருந்ததாலும், நீச்சல் தெரியாததாலும் அவன் நீரில் மூழ்கினான். உடனே அதிர்ச்சியடைந்த நண்பர்கள் 2 பேரும் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என கூச்சலிட்டனர். அதற்குள் அவன் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பலியானான்.

இதனால் பயந்து போன நண்பர்கள் 2 பேரும் வீட்டிற்கு செல்லாமல் திருப்பூரில் இருந்து ரெயில் ஏறி கோவைக்கு சென்றனர். பின்னர் அவர்கள் அங்குள்ள கடையில் வேலை கேட்டதாக தெரிகிறது. 2 பேரும் சிறுவர்கள் என்பதால் சந்தேகம் அடைந்த கடைக்காரர் அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளார். அப்போது அவர்கள் நடந்த சம்பவத்தை கூறி அழுதுள்ளனர்.

இதனையடுத்து அந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கு கடைக்காரர் தகவல் தெரிவித்தார். அதன் பேரில் பெற்றோர்கள் கோவைக்கு விரைந்து சென்று சிறுவர்களை மீட்டு திருப்பூருக்கு அழைத்து வந்தனர். இதன் பின்னர் நேற்று காலை அந்த சிறுவர்களை அழைத்துக்கொண்டு 15 வேலம்பாளையம் போலீசார், தீயணைப்பு துறையினர் மற்றும் அனாசின் தாயார் உள்பட சிறுவர்களின் பெற்றோர்கள் பாறைக்குழிக்கு சென்றனர்.

அங்கு நீண்ட நேர முயற்சிக்கு பின்னர் தீயணைப்பு துறையினர் சிறுவன் அனாசின் உடலை மீட்டனர். அங்கு சிறுவனின் உடலை பார்த்து அவனது தாயார் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது காண்பவர்களை கண்கலங்க செய்தது. பின்னர் போலீசார் அனாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Related Tags :
Next Story