திருப்பூரில் நொய்யலை சீரமைக்க ரூ.125 கோடி ஒதுக்கீடு கலெக்டர் தகவல்


திருப்பூரில் நொய்யலை சீரமைக்க ரூ.125 கோடி ஒதுக்கீடு கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 16 Oct 2017 4:30 AM IST (Updated: 16 Oct 2017 3:20 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் நொய்யலை சீரமைக்க ரூ.125 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நொய்யல் தூய்மைப்பணி முதல்கட்ட நிறைவு விழாவில் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்தார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் முழுவதும் கடந்த மாதம் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நொய்யல் ஆற்றில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவு ஆங்காங்கே தேங்கி நின்றன. இந்த கழிவுகளை அகற்றி நொய்யலை தூர்வார கடந்த 4-ந்தேதி மாவட்ட, மாநகராட்சி நிர்வாகத்தினருடன் தொழில்துறையினர் இணைந்து முதல் கட்ட தூய்மை பணியை தொடங்கினார்கள். இந்த முயற்சியினால் வளர்மதி பாலத்தில் இருந்து மணியக்காரம்பாளையம் பாலம் வரை 3 கிலோ மீட்டர் தூரம் வரை ஆற்றில் உள்ள கழிவுகள் அகற்றப்பட்டு தூர்வாரப்பட்டது. மேலும் கரைகளில் மரக்கன்றுகளும் நட்டு, கரையோரங்களில் கம்பி வேலிகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அப்துல்கலாமின் பிறந்தநாளான நேற்று, முதல் கட்ட பணி நிறைவு விழா நடைபெற்றது. விழாவையொட்டி பள்ளி மாணவ, மாணவிகள், தொழில்துறையினர், பொதுமக்கள் பங்கேற்கும் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

ஊர்வலத்திற்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா எம்.சண்முகம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். எம்.ஜி.பி.ஷோரூம் அருகில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் நொய்யல் வீதி வழியாக அணைக்காடு நொய்யல் கரையோரம் வந்து முடிவடைந்தது. இந்த ஊர்வலத்தில் திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து அணைக்காடு பகுதியில் நொய்யலை மீட்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. முன்னதாக மேடையில் வைக்கப்பட்டிருந்த அப்துல்கலாம் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. விழாவில் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி, கோவை சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

விழாவுக்கு மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, சப்-கலெக்டர் ஷ்ரவன் குமார், திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிட்மா தலைவர் அகில் ரத்தினசாமி வரவேற்று பேசினார். ஜீவநதி நொய்யல் சங்கத்தின் செயலாளர் கே.சண்முகராஜ் தூய்மை பணி விவரங்கள் குறித்து பேசினார்.

விழாவில் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி பேசும்போது கூறியதாவது:-

நொய்யலை மீட்கும் பணிகள் குறித்து தொழில்துறையினர் எடுக்கும் முயற்சி மிகுந்த வரவேற்கத்தக்கது. வீடு, நாம் இருக்கும் இடங்களை தூய்மையாக வைக்கவேண்டும். அதற்காக வீடுகளில் உள்ள குப்பைகளை நொய்யல் ஆற்றில் கொட்டுவது ஏற்க முடியாதது. இயற்கையை பாதுகாக்க நாம் முன்வரவேண்டும். வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையை தூய்மை செய்வது மரங்கள். இதனால் மரங்களையும் அதிக அளவு நடவேண்டும். திருப்பூரில் உள்ள அனைத்து நிறுவனங்களும் இணைந்தாலே அனைத்து வேலைகளையும் செய்து முடித்து விடலாம். ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் திருப்பூர் இணைக்கப்பட்டுள்ளதால் நொய்யலை சீரமைக்க ரூ.125 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் நடைபெறும்.

பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டாலே நீர் நிலைகள் பாதுகாக்கப்பட்டு விடும். ஒவ்வொருவரும் பிளாஸ்டிக்கை பயன்படுத்த மாட்டேன் என்றும், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணிகளில் ஈடுபடுவேன் எனவும் உறுதிமொழி எடுத்து கொள்ள வேண்டும். மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பிறந்தநாளின் போது ஒவ்வொரு மரம் நடுங்கள். பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு அடைந்தாலே போதும். பெற்றோர், சமுதாயம் என அனைத்தும் மாறிவிடும். பிளாஸ்டிக் இல்லாமல் நம்மால் வாழ முடியும். ஆனால் நொய்யல் போன்ற நீர் நிலைகள் இல்லாமல் நம்மால் வாழ முடியாது. இதற்காக மாநகர, மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து வனிதா மோகன் பேசியதாவது:-

50 வருடங்களுக்கு முன்னர் நொய்யலில் நன்னீர் கரை புரண்டு ஓடும். இதில் வந்து குளித்த அனுபவம் எங்களுக்கு உண்டு. ஜீவநதியாக இருந்த இந்த நொய்யல் தற்போது சாக்கடை கால்வாயாக மாறியுள்ளது. பராமரிப்பின்மையும், ஆக்கிரமிப்பு, மக்கள் தொகை பெருக்கமுமே இதற்கு காரணமாக இருக்கிறது. இது மிக வருந்தத்தக்கது. வெளிநாடுகளில் நதிகள் அழியவில்லை. ஆனால் நம் நாட்டில் தான் நதிகளை பாதுகாக்க தவறுகிறோம். சரியாக பாதுகாத்தால் தேவைக்கு அதிகமான நீர் கிடைக்கும். திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள கிராமப்புறங்களில் உள்ள நீர் நிலைகளை எளிதாக தூர்வார முடிகிறது. ஆனால் நகர்புறத்தில் உள்ள நீர் நிலைகளில் நிரம்பியுள்ள பிளாஸ்டிக் கழிவு களால் தூர்வார இயலாமலே உள்ளது. நொய்யலை சுத்தம் செய்து கான்கிரீட் தளம் பதிக்கலாம் அல்லது கல் பதித்து பாதுகாத்தால் முட்புதர்கள் வளராமல் சுத்தமாக வைத்து கொள்ளலாம். சாயக்கழிவுகள் வெளியேற்றுவதும் வெட்ட வெளிச்சமாகி விடும். வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரும் இதில் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முடிவில், கூட்டத்தில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள், பொதுமக்கள், தொழில்துறையினருக்கு துணியினால் ஆன பை இலவசமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து மாநகரம் முழுவதும் 1 லட்சம் துணி பைகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. விழாவில் 20-க்கும் மேற்பட்ட தொழில் கூட்டமைப்பினர் 10-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் சைமா துணை தலைவர் கீதாஞ்சலி கோவிந்தப்பன் நன்றி கூறினார்.


Next Story