பாலாற்றில் அமைக்கப்பட்ட கிணற்றில் மூழ்கி பிளஸ்-2 மாணவன் உள்பட 2 பேர் பலி


பாலாற்றில் அமைக்கப்பட்ட கிணற்றில் மூழ்கி பிளஸ்-2 மாணவன் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 15 Oct 2017 11:00 PM GMT (Updated: 15 Oct 2017 9:51 PM GMT)

வேலூர் பாலாற்றில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் கிணற்றில் கயிறு கட்டி இறங்கி குளித்த பிளஸ்-2 மாணவன் உள்பட 2 பேர் மேலே வரும்போது கயிறு அறுந்ததால் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர்,

கர்நாடகா, ஆந்திரா மற்றும் வேலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழைகாரணமாக பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதை பொதுமக்கள் வேடிக்கை பார்த்து வருகிறார்கள். பலர் விபரீதத்தை அறியாமல் ஆற்றில் இறங்கி குளிக்கிறார்கள். அதுபோன்ற நேரங்களில் ஆற்றில் மணல் எடுத்த பள்ளத்தில் சிக்கி சிலர் இறந்துள்ளனர்.

பாலாற்றில் குடிநீருக்காக கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், இந்த கிணறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. வேலூர் சேண்பாக்கம் பகுதியில் பாலாற்றில் உள்ள கிணற்றிலும் தண்ணீர் நிரம்பி உள்ளது. இந்த கிணற்றின் மேல்பகுதி சிமெண்டு சிலாப்புகளால் மூடப்பட்டு குறிப்பிட்ட ஒரு பகுதி மட்டும் திறந்த நிலையில் உள்ளது.

சேண்பாக்கம் களத்துமேட்டுத்தெருவை சேர்ந்த சண்முகத்தின் மகன்கள் சத்திரியன் (வயது17), லிங்கேஷ் (15), சத்திரியனின் நண்பன் சோளாபுரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கோகுல்ராஜ் (16). இவர்கள் 3 பேரும் நேற்று மாலை குளிக்க சென்றுள்ளனர். சத்திரியன் 12-ம் வகுப்பு படித்துவந்தார். லிங்கேஷ் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர்கள் கிணற்றில் உயரமாக உள்ள சுற்றுச்சுவர்மீது ஏறி கிணற்றின் திறந்தவெளிப்பகுதி வழியாக கயிறு கட்டி இறங்கி குளித்துள்ளனர். பின்னர் 3 பேரும் ஒரே நேரத்தில் கயிறு வழியாக மேலே ஏறிவந்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக கயிறு அறுந்துள்ளது. இதில் சத்திரியன் மற்றும் கோகுல்ராஜ் ஆகிய இருவரும் கிணற்றுக்குள் விழுந்துவிட்டனர். லிங்கேஷ் மட்டும் அதிர்ஷ்ட வசமாக தப்பிவந்துவிட்டார்.

கிணற்றுக்குள் விழுந்த இருவரும் தண்ணீரில் மூழ்கி விட்டனர். இது பற்றி தப்பி வந்த லிங்கேஷ் தகவல் தெரிவித்துள்ளார். உடனே பொதுமக்கள் சென்று அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் வேலூர் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள், நிலைய அலுவலர் (பொறுப்பு) ஆறுமுகம் தலைமையில் விரைந்து சென்று இருவரின் உடல்களையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தவர்கள், சேண்பாக்கத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அந்த பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அங்கு திரண்டு விட்டனர். சுமார் ½ மணிநேரத்திற்கு பிறகு சத்திரியன், கோகுல்ராஜ் ஆகிய இருவரும் பிணமாக மீட்கப்பட்டனர். அவர்களுடைய உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Tags :
Next Story