பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியும் சாணாங்குப்பம், மின்னூர் ஏரிக்கு தண்ணீர் வரவில்லை


பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியும் சாணாங்குப்பம், மின்னூர் ஏரிக்கு தண்ணீர் வரவில்லை
x
தினத்தந்தி 15 Oct 2017 10:45 PM GMT (Updated: 15 Oct 2017 9:51 PM GMT)

ஆம்பூர் பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியும் சாணாங்குப்பம், மின்னூர் ஏரிக்கு தண்ணீர் வரவில்லை. இதற்கு அதிகாரிகளின் அலட்சியம் தான் காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஆம்பூர்,

ஆந்திரா, கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையாலும், பாலாறு நீர்பிடிப்பு பகுதி, வாணியம்பாடி, ஆம்பூர் பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாகவும் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் வாணியம்பாடி, ஆம்பூர், பச்சகுப்பம் மற்றும் விரிஞ்சிபுரத்தில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்து பாலாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வறண்டு கிடந்த பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பாலாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கிணறுகளின் நீர்மட்டமும், நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. பாலாற்றில் ஆங்காங்கே தடுப்பணை கட்டி இருந்தால் நீர் சேமித்து வைக்க முடியும். ஆனால் மாவட்டத்தில் பாலாற்று நீரை சேமித்து வைக்க எந்தவொரு தடுப்பணையும் கட்டவில்லை. பாலாற்றையொட்டி உள்ள ஏரி பகுதிக்கு அந்த நீரை திருப்பி அதனை சேமித்து வைக்க அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர்.

குறிப்பிட்டு சொல்லப்போனால் பாலாற்று பகுதிக்கு மிக அருகாமையில் ஆம்பூர் அருகே உள்ள மின்னூர் ஏரியும், ஆம்பூர் சாணாங்குப்பம் ஏரியும் அமைந்து உள்ளது. பாலாற்றில் வெள்ளம் செல்லும் போது அங்கிருந்து தண்ணீர் கொண்டு வர நீர்வரத்து கால்வாய் வசதி இருந்தும் பாலாற்றில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட இந்த ஏரிப்பகுதிக்கு வரவில்லை என்பது அப்பகுதி மக்களை வேதனை அடைய செய்துள்ளது.

மின்னூரில் 85 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி மூலம் சுமார் 30 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பயன்பெறும். மின்னூர் ஏரிக்கு பாலாற்றின் மாராப்பட்டு பகுதியில் இருந்து தண்ணீர் கொண்டுவர கால்வாய் வசதி உள்ளது.

இதேபோல் ஆம்பூர் நகரையொட்டி 40 ஏக்கர் பரப்பளவில் சாணாங்குப்பம் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி மூலம் 150 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். சாணாங்குப்பம் ஏரிக்கு சோலூர் பகுதி பாலாற்றில் இருந்தும், விண்ணமங்கலம் ஏரியில் இருந்து வெளிவரும் உபரி நீரையும் கொண்டு வருவதற்கு நீர்வரத்துகால்வாய் உள்ளது.

பாலாற்றில் இருந்து நீர்வரத்து கால்வாய் இருந்தும் மின்னூர், சாணாங்குப்பம் ஏரிக்கு இன்று வரை பாலாற்று நீர் வரவில்லை. நீர்வரத்து கால்வாய்கள் இருந்தும், அந்த கால்வாய்கள் தூர்வாரப்படாமலும், ஆக்கிரமிப்புகளாலும் நீர்வரத்து கால்வாய் இருக்கிறதா? இல்லையா? என சந்தேகப்படும் அளவுக்கு கால்வாய் தூர்ந்துபோயும், சில இடங்களில் காணாமல் போயும் உள்ளது.

இந்த கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி இருந்தால் ஏரிக்கு பாலாற்று நீர் வந்து நிரம்பி இருக்கும். ஆனால் அதிகாரிகள் ஏனோ அதனை கண்டுகொள்ளவில்லை.

பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த 2 ஏரிகளுக்கும் உள்ள நீர்வரத்து கால்வாய்களை மழைக்காலத்திற்கு முன்பே தூர்வார வேண்டுமென விவசாயிகளும், பொதுமக்களும் சம்பந்தப்பட்ட துறையினரிடம் பலமுறை புகார் அளித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இதனால் தற்போது மின்னூர் ஏரி முழுவதும் கருவேல மரங்கள் சூழ்ந்தும், ஏரிக்கால்வாய் தூர்ந்தும், ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியும், வெறும் காடுபோல் காட்சி அளிக்கிறது.

இதேபோல் சாணாங்குப்பம் ஏரியை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் சாணாங்குப்பம் பகுதியில் ஏரி உள்ளதா? என ஆம்பூர் மக்களுக்கே சந்தேகம் உள்ளது. அந்த அளவுக்கு அந்த ஏரி இன்று ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி நாளுக்குநாள் சுருங்கி வருகிறது. மேலும் நீர்வரத்து கால்வாய்களும், விண்ணமங்கலம் ஏரியில் இருந்து வரும் உபரி நீர்கால்வாயும் காணாமல் போய்விட்டது. இதனால் பாலாற்று வெள்ளத்தை பார்த்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தாலும் ஏரிக்கு நீர்வரத்து இல்லாததால் அவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘பாலாற்றில் தற்போது வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மழைக்காலம் தொடங்க உள்ளது. இதனால் ஏரிக்கு நீர்வரும் கால்வாய்களை தூர்வார வேண்டுமென நாங்கள் கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் பொதுப்பணித்துறையினரும், வருவாய்துறையினரும் அதனை கண்டுகொள்ளவில்லை. நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகளும் அதிகரித்து வருகிறது. வெள்ளம் கரைபுரண்டு ஓடும் இந்த நேரத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் தண்ணீரை கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு மின்னூர், சாணாங்குப்பம் ஏரிக்கு பாலாற்றில் இருந்து நீரை கொண்டுவர நீர்வரத்து கால்வாய்களை உடனடியாக தூர்வார வேண்டும்’ என்றனர்.


Next Story