கரிவலம்வந்தநல்லூர் அருகே பரிதாபம் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 9 வயது சிறுவன் பலி


கரிவலம்வந்தநல்லூர் அருகே பரிதாபம் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 9 வயது சிறுவன் பலி
x
தினத்தந்தி 15 Oct 2017 10:15 PM GMT (Updated: 15 Oct 2017 9:53 PM GMT)

கரிவலம்வந்தநல்லூர் அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 9 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

சங்கரன்கோவில்,

நெல்லை மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள சென்னிகுளத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய மகன் தருண்குமார் (வயது 9). இவன் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். அவனுடைய தாத்தா கருப்பசாமி. இவர் அங்குள்ள அம்மன் கோவிலில் பூசாரியாக உள்ளார்.

இந்த நிலையில் நேற்று விடுமுறை நாள் என்பதால், சிறுவன் தனது தாத்தா கருப்பசாமியுடன் மாலையில் கோவிலுக்கு சென்றான். கோவிலுக்கு வெளியே தண்ணீர் டிராக்டர் ஒன்று நின்று கொண்டு இருந்தது. அதில் ஆட்கள் யாரும் இல்லை. இதனால் அவன் அந்த டிராக்டரில் ஏறி டிரைவர் சீட்டில் அமர்ந்து விளையாடிக் கொண்டு இருந்தான்.

அப்போது, அவன் திடீரென்று டிராக்டரின் கியரை போட்டதாக கூறப்படுகிறது. இதனால் டிராக்டர் மெதுவாக நகர்ந்தது. இதில் பயந்து போன அவன் டிராக்டரில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தான். அப்போது, டிராக்டரின் பின் பக்க சக்கரம் அவன் மீது ஏறி இறங்கியது. இதில் ரத்த வெள்ளத்தில் அவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.

இதுகுறித்து தகவல் அறிந்த கருப்பசாமி தனது பேரன் உடலை பார்த்து கதறி அழுதார். மேலும் அவனுடைய பெற்றோரும் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த தனது மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதுதொடர்பாக கரிவலம்வந்தநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சிறுவன் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Related Tags :
Next Story