மத்திய நிதிக்குழுவில் புதுச்சேரி சேர்ப்பு முதல் அமைச்சர் நாராயணசாமி தகவல்
மத்திய நிதிக்குழுவில் புதுச்சேரி சேர்க்கப்பட்டுள்ளதால் வரி வருவாயில் இனி 42 சதவீதம் கிடைக்கும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி,
புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
இந்திய பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சி அடைந்துள்ளது. 7.7 சதவீதமாக இருந்த வளர்ச்சி விகிதம் இப்போது 5.7 சதவீதமாக குறைந்துள்ளது. உண்மையிலேயே வளர்ச்சி என்பது 3.7 சதவீதமாகத்தான் உள்ளது. விவசாய உற்பத்தி குறைவு, தொழிற்சாலைகள் மூடல் போன்றவற்றால் வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. நாட்டின் ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகரித்துள்ளது.
பாராளுமன்ற தேர்தலின்போது நரேந்திர மோடி அறிவித்த ஆண்டுக்கு ஒரு கோடி பேருக்கு வேலை என்பது பகல் கனவு ஆகிவிட்டது. கடந்த 3 ஆண்டுகளில் 54 லட்சம் பேருக்குத்தான் வேலை வழங்கப்பட்டுள்ளது. நிறைய தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. பண மதிப்பிழப்பு, சரக்கு சேவை வரி போன்றவற்றால் மிகப்பெரிய அளவில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களிடம் பணப்புழக்கம் இல்லை. இப்போது ஹஜ் பயணிகளின் புனித யாத்திரைக்கான சலுகையையும் ரத்துசெய்யப்போவதாக கூறுகின்றனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. தொடர்ந்து சிறுபான்மையினருக்கான சலுகைகள் மத்திய அரசால் படிப்படியாக விலக்கப்படுகிறது.
புதுவையில் சட்டமன்றம் இருந்தாலும் யூனியன் பிரதேசம் என்று கருதாமல் மத்திய அரசு கடந்த காலங்களில் போதிய நிதியை தராமல் இருந்தது. கடந்த 5 ஆண்டுகளாக மாநில அரசுகளுக்கு வழங்கப்படும் 42 சதவீத நிதியைக்கூட தராமல் 27 சதவீத நிதியை மட்டுமே தந்தது. ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு 10 முதல் 15 சதவீத நிதியை உயர்த்தி திட்டமில்லா செலவுகளுக்கு வழங்கும். ஆனால் புதுவைக்கு அவ்வாறு தரப்படவில்லை. எனவே மத்திய நிதிக்குழுவில் புதுவையை சேர்க்கவேண்டும் என்று தொடர்ந்து பிரதமரை சந்தித்து வலியுறுத்தினோம்.
அதன்பயனாக புதுவை மத்திய நிதிக்குழுவில் இப்போது சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மற்ற மாநிலங்களுக்கு கிடைப்பதுபோல் மத்திய அரசின் வரி வருவாயில் நமக்கும் 42 சதவீத நிதி கிடைக்கும்.
புதுவை வந்த மத்திய விமானப்போக்குவரத்து மந்திரியிடம் புதுவையில் இருந்து பெங்களூரு, கொச்சி, திருப்பதிக்கு விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டேன். மேலும் விமான ஓடுதள விரிவாக்கத்துக்கு மத்திய அரசு நிதி வழங்கவேண்டும் என்றும் வலியுறுத்தினேன். அதற்கு அவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்ட பின் புதுவை மாநிலத்தின் வருவாய் மாதந்தோறும் ரூ.40 கோடி குறைந்து வருகிறது. கடந்த ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் தலா ரூ.40 கோடி வருவாய் குறைந்துள்ளது. இதில் ஜூலை மாதத்துக்கான இழப்பீடு ரூ.40 கோடியை மத்திய அரசு வழங்கி உள்ளது. வரி வருமானம் குறைந்துள்ளதால் திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசிடம் நிதிகேட்டும் இதுவரை தரவில்லை.
டெல்லியில் நடந்த கவர்னர்கள் மாநாட்டில் பேசிய ஜனாதிபதி, கவர்னர்கள் மத்திய மாநில அரசுக்கு பாலமாக இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மாநில வளர்ச்சிக்கு ஒத்துழைக்குமாறு கூறியுள்ளார். மக்கள் நல திட்டங்களை நிறைவேற்ற அரசோடு ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். இந்த அறிவுரைகளை அனைத்து மாநில கவர்னர்களும் கடைபிடிப்பார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் பழுதடைந்த பாலமாக இருக்கக்கூடாது.
இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது:–
நாட்டில் இப்போது சரித்திரம் திரும்புகிறது. பஞ்சாப் மாநிலத்தில் நடந்த எம்.பி. தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது. கேரளாவிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்றுள்ளது. இது மக்கள் மத்தியில் மனமாற்றம் ஏற்பட்டுள்ளதையே காட்டுகிறது. மக்கள் இப்போது காங்கிரஸ் கட்சியின் பக்கம் திரும்பி உள்ளனர்.
இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
பேட்டியின்போது அமைச்சர் கந்தசாமி, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், அனந்தராமன், ஜெயமூர்த்தி, விஜயவேணி ஆகியோர் உடனிருந்தனர்.