மக்கள் குறைதீர்க்கும் நாளில் கலெக்டரிடம் மனு அதிக கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்கள் மீது நடவடிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக கட்டணம் வசூல் செய்யும் தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாளில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக கட்டணம் வசூல் செய்யும் தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாளில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
மக்கள் குறைதீர்க்கும் நாள்தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். அவர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் நலச்சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது;–
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தியேட்டர்களில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூல் செய்பவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தியேட்டர்களில் உள்ள கழிப்பறைகள், சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திடவும், சுத்தமான குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டியும் தியேட்டர் நிர்வாகத்தை வலியுறுத்த வேண்டும். தியேட்டர்களில் உணவு பொருட்கள் அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதை தடுக்க வேண்டும். தியேட்டர்களின் கட்டண விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள வசதியாக மாவட்ட நிர்வாகம் கட்டண விவரத்தை விளம்பரம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
அதேபோல் தமிழக அரசு வாகனங்களில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை கொடுத்து, அரசு துறைகளின் பெயரை தமிழில் எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கூறி இருந்தனர்.
கந்தசஷ்டிதூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ரமேஷ் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருகிற 25–ந் தேதி கந்த சஷ்டி திருவிழா நடக்கிறது. இதையொட்டி இயக்கப்படும் அரசு பஸ்கள் மற்றும் சிறப்பு பஸ்களில் அதிக கட்டணம் வசூல் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழக அரசு மற்றும் சிறப்பு பஸ்களில் பயணிகள் அமர்ந்து செல்வதற்குரிய இருக்கை வசதிகள் மற்றும் இடைவெளி ஊர்களில் பயணிகளை ஏற்றி– இறக்கி செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
கோவில்பட்டி ஸ்ரீராம்நகரை சேர்ந்த அன்னலட்சமி என்பவர் தனது குழந்தைகளுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தார். அவர் மாவட்ட கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எனது கணவர் முருகன், ரூ.7 லட்சம் வாங்கியதாகவும், அந்த பணத்தை திருப்பி தரும்படியும் ராஜ் என்பவர் எங்களை மிரட்டுகிறார். எனது கணவர் முருகன் திடீரென மாயமானார். அவர் குறித்து எந்த தகவலும் இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் எனது கணவரை மீட்டு தந்து கந்து வட்டி கொடுமையில் இருந்து எங்களை காப்பாற்ற வேண்டும் என்ற கூறப்பட்டுள்ளது.
இரவு நேர கடைகள்சாத்தான்குளம் வர்த்தக சங்கத்தை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கொடுத்த மனுவில், சாத்தான்குளம் பழைய பஸ் நிலையம் பகுதியில் காவல் துறை உத்தரவின் பேரில் இரவு 10 மணிக்கு மேல் கடைகள் இயங்க கூடாது என்று கூறுகிறார்கள். எனவே எங்கள் ஊர்க்காரர்கள் வெளியூர்களுக்கு சென்று விட்டு இரவு நேரங்களில் ஊர் திரும்பும் வியாபாரிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். அதே போல் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு தேவையாக உணவுகளையும் வாங்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். எனவே அந்த பகுதி கடைகள் இரவு முழுவதும் இயங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை தூத்துக்குடி ஒன்றிய செயலாளர் முருகேசன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், பேய்குளம் வடகால் நீர்பாசனத்திற்கு உட்பட்ட இடங்களில் அனுமதி இல்லாமல் நிலத்தடி நீர் உறிஞ்சி விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சுற்று வட்டார கிராமங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும். அதே போல் தூத்துக்குடி– நெல்லை நெடுஞ்சாலையில் குமாரகிரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் தனியார் மீன் பதனிடும் தொழிற்சாலையில் இருந்து கழிவு நீர் வெளியிடப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கோடு ஏற்படுகிறது. இதனை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.