ரெயிலில் பட்டாசு கொண்டு சென்றால் 3 வருடம் சிறை ரெயில்வே போலீசார் எச்சரிக்கை


ரெயிலில் பட்டாசு கொண்டு சென்றால் 3 வருடம் சிறை ரெயில்வே போலீசார் எச்சரிக்கை
x
தினத்தந்தி 16 Oct 2017 10:45 PM GMT (Updated: 16 Oct 2017 7:31 PM GMT)

ரெயிலில் பட்டாசு கொண்டு சென்றால் 3 வருடம் சிறை தண்டனை விதிக்கப்படும் என ரெயில்வே போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

பெரம்பூர்,

தீபாவளியை முன்னிட்டு பள்ளி கல்லூரி, காவல்துறை, தீயணைப்புத்துறை, ரெயில்வே துறை மூலம் விபத்துகளை தவிர்க்க பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நேற்று பெரம்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே இன்ஸ்பெக்டர்கள் பச்சையம்மாள், நந்த்பகதூர், அன்குர் தியாகி தலைமையிலான போலீசார், எளிதில் தீப்பற்றக்கூடிய பட்டாசு போன்ற பொருட்களை ரெயிலில் கொண்டு செல்வதை தவிர்க்கவேண்டும் என்று பயணிகளுக்கு அறிவுறுத்தினர்.

மேலும் ஜன்னல் ஓரம் அமர்ந்து பயணம் செய்பவர்கள் கவனத்துடன் இருப்பது மூலம் செயின் மற்றும் செல்போன் திருடர்களிடம் இருந்து தங்களை காப்பாற்றி கொள்ளமுடியும் என்றும் போலீசார் கூறினார். இது குறித்த துண்டு பிரசுரங்களை போலீசார் பயணிகளிடம் வழங்கினர்.

பயணிகள் பட்டாசுகளுடன் ரெயிலில் பயணம் செய்வது கண்டறியப்பட்டால் அவர்கள் ரெயில்வே சட்டம் 164-ன் கீழ் கைது செய்யப்பட்டு, ரூ.1,000 அபராதம் அல்லது அதிகபட்சமாக 3 வருட சிறை தண்டனை வழங்கப்படும் என ரெயில்வே போலீசார் எச்சரித்தனர்.

மேலும் ரெயிலுக்கு காத்திருந்த பயணிகளிடமும் ரெயிலில் செல்லும் பயணிகளிடமும் சோதனை செய்து, அவர் களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

Next Story