தலையில் அம்மிக்கல்லை போட்டு பெண் கொலை: மாமியாரை கொன்ற மருமகன் கைது


தலையில் அம்மிக்கல்லை போட்டு பெண் கொலை: மாமியாரை கொன்ற மருமகன் கைது
x
தினத்தந்தி 16 Oct 2017 11:45 PM GMT (Updated: 16 Oct 2017 8:10 PM GMT)

மாங்காடு அருகே தலையில் அம்மிக்கல்லை போட்டு பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், கள்ளக்காதல் தகராறில் தீர்த்துக்கட்டிய அவரது மருமகனை போலீசார் 4 ஆண்டுகளுக்கு பின்னர் கைது செய்தனர்.

பூந்தமல்லி,

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த சிவன்தாங்கல் குன்றத்தூர் மெயின்ரோடு பகுதியில் வசித்து வந்தவர் கஸ்தூரி (வயது 50). அரிசி வியாபாரம் மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த 2013-ம் ஆண்டு தனது வீட்டில் தலையில் அம்மிக்கல்லால் தாக்கப்பட்டு கஸ்தூரி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். 4 ஆண்டுகள் ஆகியும் கொலை தொடர்பாக எந்த துப்பும் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் நிலுவையில் உள்ள வழக்குகளை மீண்டும் விசாரிக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதையடுத்து துணை கமிஷனர் சர்வேஸ்ராஜ் மேற்பார்வையில் போரூர் உதவி கமிஷனர் கண்ணன் தலைமையில் தனிப்படை அமைத்து மீண்டும் இந்த கொலை வழக்கை போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில், கொலை செய்யப்பட்ட கஸ்தூரிக்கும், அவரது மருமகன் சூர்யகுமார்(32) என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது தெரியவந்தது. மேலும் கடந்த சில ஆண்டுகளுக்குள் சூர்யகுமார் குன்றத்தூர் பகுதியில் புதிதாக வீடு கட்டி, ஆடம்பரமாக வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து சூர்யகுமாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கள்ளக்காதல் மற்றும் பணத்தகராறு காரணமாக மாமியார் கஸ்தூரியை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

கொலை செய்யப்பட்ட கஸ்தூரிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. மேலும், மருமகன் சூர்யகுமாருடனும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. கஸ்தூரிக்கு இன்சூரன்ஸ் கம்பெனியில் இருந்து ஒரு பெரிய தொகை வந்துள்ளது. இதனை அறிந்த சூர்யகுமார், சம்பவத்தன்று மாமியார் வீட்டிற்கு சென்று அந்த பணத்தை வைத்து, தனக்கு ஒரு வேன் வாங்கி தரும்படி கேட்டுள்ளார்.

ஆனால் கஸ்தூரி மறுத்துள்ளார். மேலும் தன்னை தவிர வேறு யாருடனும் தொடர்பு வைத்திருக்க கூடாது என்று சூர்யகுமார் கூறி உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. ஆத்திரம் அடைந்த சூர்யகுமார் கஸ்தூரியை பிடித்து கீழே தள்ளினார். அங்கு இருந்த அம்மிக்கல் மீது தலையின் பின்புறம் மோதியதில் கஸ்தூரி மயங்கினார். பின்னர் அதே அம்மிக்கல்லை எடுத்து மாமியாரின் தலையில் போட்டு கொலை செய்து விட்டு ஏதும் தெரியாதது போல் அங்கிருந்து சென்று விட்டார்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து சூர்யகுமாரை போலீசார் கைது செய்தனர். சம்பவம் நடந்தபோது சூர்யகுமார் பயன்படுத்திய ‘டவல்’ கஸ்தூரியின் வீட்டிற்குள் இருந்தது. இதனால் போலீசாரிடம் தான் மாட்டிக்கொள்ளாமல் இருக்க தனது மனைவி அம்முவிடம் அந்த ‘டவலை’ எடுத்து வருமாறு கூறி உள்ளார். இதுகுறித்து அம்மு கேட்டபோது, ‘இந்த கொலையை செய்தது நான் தான். இதனை மறைத்து விட்டால் சொத்து, பணம் மொத்தமும் நமக்குதான் வரும்’ என்று கூறி உள்ளார்.

இதையடுத்து தனது தாயை கொலை செய்தது தனது கணவர் தான் என்று தெரிந்தும் அதனை போலீசாருக்கு தெரிவிக்காமல் அம்மு மறைத்து விட்டார். எனவே இந்த கொலையை மறைத்த குற்றத்திற்காக அம்முவையும் போலீசார் கைது செய்தனர். 4 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Next Story