நாட்டில் கார் விற்பனை இருக்கலாம், உற்பத்தி இருக்கிறதா? பிரதமர் மோடிக்கு யஷ்வந்த் சின்கா கேள்வி


நாட்டில் கார் விற்பனை இருக்கலாம், உற்பத்தி இருக்கிறதா? பிரதமர் மோடிக்கு யஷ்வந்த் சின்கா கேள்வி
x
தினத்தந்தி 16 Oct 2017 10:45 PM GMT (Updated: 16 Oct 2017 9:47 PM GMT)

‘‘நாட்டில் கார் விற்பனை இருக்கலாம். ஆனால், உற்பத்தி இருக்கிறதா?’’ என்று பிரதமர் மோடிக்கு பா.ஜனதா மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா கேள்வி விடுத்தார்.

மும்பை,

பாரதீய ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான யஷ்வந்த் சின்கா, ரூபாய் நோட்டு மதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. விவகாரத்தில் பிரதமர் மோடியையும், மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியையும் ஏற்கனவே விமர்சித்து கருத்து தெரிவித்து இருந்தார். இது பா.ஜனதா வட்டாரத்தில் புயலை கிளப்பியது.

இந்த நிலையில், மீண்டும் அவர் பிரதமர் மோடியை சாடியுள்ளார். மராட்டிய மாநிலம் விதர்பா மண்டலம் அகோலாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் 79 வயது யஷ்வந்த் சின்கா கலந்து கொண்டு பேசினார். அப்போது, பிரதமர் மோடியின் செயல்பாட்டை அவர் கடுமையாக விமர்சித்தார். இது தொடர்பாக யஷ்வந்த் சின்கா கூறியதாவது:–

நமது அரசின் தலைவர் (மோடி) சமீபத்தில் தன்னுடைய நீண்ட நேர உரையின்போது, நாட்டின் வளர்ச்சியை விவரிக்க சில எண்களை சுட்டிக்காட்டி, ஏராளமான கார்களும், மோட்டார் சைக்கிள்களும் விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிட்டார். வெறும் எண்களை மட்டும் குறிப்பிட்டால், நாடு வளர்ச்சி அடைவதாக அர்த்தம் ஆகி விடுமா?

நாம் ஏற்கனவே பின்னடைவை சந்திக்கிறோம். எண்கள் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். எண்களால் ஒரு வி‌ஷயத்தை நிரூபிக்க முடியும், அதே வி‌ஷயத்தின் மற்றொரு பக்கத்தையும் விவரிக்க முடியும். நாட்டில், கார்களும், மோட்டார் சைக்கிள்களும் அதிகமாக விற்பனை செய்யப்படலாம். ஆனால், உற்பத்தி இருக்கிறதா? என்பது தான் கேள்வி.

நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது, நாட்டில் வரி பயங்கரவாதமும், ரெய்டு ராஜ்யமும் நடப்பதாக அடிக்கடி குற்றம்சாட்டுவதை வாடிக்கையாக கொண்டிருந்தோம். ஆனால், இன்றைக்கு நாட்டில் நடப்பதை விவரிக்க என்னிடம் வார்த்தை இல்லை. காரணம், பயங்கரவாதத்தை தாண்டி வேறு வார்த்தை இல்லை. பயங்கரவாதமே இறுதி வார்த்தை.

ஜி.எஸ்.டி. ஒரு நல்ல மற்றும் எளிமையான வரி. ஆனால், அதிகாரத்தில் இருப்பவர்கள் அதனை கெட்டதாகவும், சிக்கல் நிறைந்ததாகவும் மாற்றிவிட்டனர். ஜி.எஸ்.டி. நடைமுறையில் காணப்படும் முரண்பாடுகளை நீக்குவது அரசின் கடமை.

இவ்வாறு யஷ்வந்த் சின்கா தெரிவித்தார்.

முன்னதாக, சமூக சீர்திருத்தவாதி ஜெயபிரகாஷ் நாராயணின் நற்பணிகளை நினைவுகூர்ந்த அவர், அரசின் சக்தியை கண்காணிக்கும் பொருட்டு, மக்கள் சக்தி (லோக்சக்தி) அமைக்கப்பட வேண்டும் என்றும், அதனை அகோலாவில் இருந்தே தொடங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.


Next Story