நார் தொழிற்சாலையை மூட வேண்டும் மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு


நார் தொழிற்சாலையை மூட வேண்டும் மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 16 Oct 2017 11:00 PM GMT (Updated: 16 Oct 2017 10:14 PM GMT)

மொடக்குறிச்சி அருகே உள்ள நார் தொழிற்சாலையை மூட வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

ஈரோடு,

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

மொடக்குறிச்சி தாலுகா அனுமன்பள்ளி அஞ்சுராம்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

எங்களது பகுதியில் தேங்காய் மட்டையில் இருந்து நார் பிரித்தெடுக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையினால் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் மாசுபடுகிறது. இதனால் சுத்தமான குடிநீர் எங்களுக்கு கிடைப்பதில்லை. மேலும் தொழிற்சாலைகளுக்கு அருகில் நார் கொட்டப்படுவதால் விவசாய நிலம் பாதிக்கப்படுகிறது. எனவே சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் நார் தொழிற்சாலையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.

ஈரோடு அருகே சாவடிபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், “கடந்த சில நாட்களுக்கு முன்பு வறட்சி காரணமாக தெரு குழாய்களில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. அப்போது ஒரே இடத்தில் 5 குழாய்கள் அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. தற்போது குடிநீர் தட்டுப்பாடு நீங்கி இருப்பதால் தெரு குழாய்களில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்று கூறப்பட்டு இருந்தது.

இதேபோல் ஈரோடு மாநகர் பகுதியில் அம்பேத்கருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு பவுத்த சங்கம் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

கூட்டத்தில், உதவித்தொகை, விலையில்லா வீட்டுமனை பட்டா, வேலை வாய்ப்பு, கல்விக்கடன், குடிநீர் வசதி, அடிப்படை வசதிகள் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மொத்தம் 153 மனுக்களை கொடுத்தனர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். இதில் மொடக்குறிச்சி அருகே கஸ்தூரிபா பகுதியை சேர்ந்த ஒருவருக்கு தையல் எந்திரம், கோபி அருகே தடப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு ரூ.10 ஆயிரம் மருத்துவத்தொகை, 4 பேருக்கு விலையில்லா இஸ்திரி பெட்டிகள், 2 பேருக்கு விலையில்லா தையல் எந்திரங்களை கலெக்டர் எஸ்.பிரபாகர் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி என்.ராமச்சந்திரன், மாவட்ட வழங்கல் அதிகாரி சுப்பிரமணி உள்பட அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

Next Story