டெங்கு காய்ச்சலை தடுக்கக்கோரி கொசுவலை அணிந்து மனுக்கொடுக்க வந்தவர்களால் பரபரப்பு


டெங்கு காய்ச்சலை தடுக்கக்கோரி கொசுவலை அணிந்து மனுக்கொடுக்க வந்தவர்களால் பரபரப்பு
x
தினத்தந்தி 16 Oct 2017 10:45 PM GMT (Updated: 16 Oct 2017 10:14 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்கக்கோரி கொசுவலை அணிந்து மனுக்கொடுக்க வந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் பரவலாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது. டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். பல்வேறு பொது அமைப்புகள், சில அரசியல் கட்சியினரும் வீடு வீடாக சென்று நிலவேம்பு கசாயம் வழங்கி வருகிறார்கள்.

இந்தநிலையில் நேற்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தமிழ்ப்புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ரா.சிந்தனை செல்வன் தலைமையில் கட்சியினர் மனுக்கொடுக்க வந்தனர். அப்போது அவர்கள் தங்கள் உடைகளுக்கு மேல் கொசு வலையை அணிந்து கொண்டு நடந்து வந்தனர். இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கலெக்டர்கள் வளாகத்தில் நின்று கொண்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து கொசுவலையை கழற்றிக்கொண்டு செல்ல அறிவுரை வழங்கினார்கள்.

பின்னர் அவர்கள் கலெக்டர் எஸ்.பிரபாகரை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் மற்றும் சில மர்ம காய்ச்சல்களால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். எங்கள் தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் பல இடங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கி வருகிறோம். அப்படி நாங்கள் செல்லும்போது அரசுத்துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்காமல் உள்ளனர். எனவே ஈரோடு மாவட்டத்தில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களால் உயிரிழப்புகள் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு ஆஸ்பத்திரிகளில் போதிய வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. 

Next Story