ரியல்எஸ்டேட் அதிபர் வெட்டி கொலை மர்ம கும்பல் வெறிச்செயல்


ரியல்எஸ்டேட் அதிபர் வெட்டி கொலை மர்ம கும்பல் வெறிச்செயல்
x
தினத்தந்தி 17 Oct 2017 4:45 AM IST (Updated: 17 Oct 2017 3:46 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் அருகே ரியல்எஸ்டேட் அதிபரை வெட்டி கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சிதம்பரம்,

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கூத்தன் கோவில் உடையார் தெருவை சேர்ந்தவர் பழனிசாமி(வயது 45). விவசாயியான இவர், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். இவருடைய மனைவி ஆதிரை(40). இவர் சிதம்பரநாதபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளியில் தலைமை ஆசிரியையாக இருந்து வருகிறார். பழனிசாமி நேற்று காலை கிராமத்தில் உள்ள தனது விளை நிலத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அங்குள்ள வயல்வெளி பகுதியில் சென்ற போது, திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை வழிமறித்தது. உடனடியாக அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.

இந்நிலையில் பழனிசாமி எதிர்பாராத நேரத்தில் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் அவரை அந்த கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில் நிலைகுலைந்து போன பழனிசாமி ரத்த வெள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் சரிந்து கீழே விழுந்தார். சிறிது நேரத்தில் அவர், துடிதுடித்து உயிரிழந்தார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து வேகமாக தப்பி சென்றுவிட்டது.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு நிஷா, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அண்ணாமலை நகர் ஏழுமலை, புதுச்சத்திரம் மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதனிடையே பழனிசாமி கொலை செய்யப்பட்டது பற்றி அறிந்த அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். தொடர்ந்து பழனிசாமியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் நேரில் சென்று, கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அப்போது கொலையாளிகள் யார் என்பதை கண்டறிந்து உடனடியாக கைது செய்யுமாறு போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார்.

இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாவது:-

ஆதிரையின் அண்ணன் சக்திவேல் என்பவரது மகள் சண்மதி. இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் படித்தார். அப்போது பழனிசாமியின் வீட்டில் கார் டிரைவராக ஆச்சாள்புரத்தை சேர்ந்த கலியமூர்த்தி மகன் சண்முகபிரகாஷ் என்பவர் வேலை பார்த்து வந்தார். சண்மதியை பல்கலைக்கழகத்திற்கு தினசரி காரில் சண்முகபிரகாஷ் அழைத்து, சென்று வருவார். இதில் இவர்களுக்கிடையே காதல் ஏற்பட்டது.

இவர்களது காதலுக்கு சண்மதியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது 2 பெண் குழந்தைகள் உள்ளன. சண்மதியை அடிக்கடி அவரது வீட்டில் சென்று பணம் வாங்கி வருமாறு சண்முகபிரகாஷ் கூறி வந்துள்ளார். இந்நிலையில் இவர்களுக்கிடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதில் உருவான கருத்துவேறு பாட்டால் இருவரும் பிரிந்துவிட்டனர்.

இந்த பிரச்சினை தொடர்பாக பழனிசாமிக்கும், சண்முகபிரகாசுக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டு இருக்கிறது. இதில் 2015-ம் ஆண்டு இருவருக்கும் இடையே அடிதடியும் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் தான் பழனிசாமி மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார். எனவே இந்த முன்விரோத காரணத்தினால் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது ரியல்எஸ்டேட் தொழில் போட்டியில் யாரேனும் கொலை செய்தனரா? என்று பல்வேறு கோணங்களில் அண்ணாமலை நகர் போலீசார் விசாரணை நடத்தி, கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த கொலை சம்பவம் காலை 6.30 மணிக்கு மேல் நடந்து இருக்கிறது. இதற்கிடையே அங்குள்ள வாய்க்கால் பாலத்தில் காலையிலேயே 4 பேர் அமர்ந்து மது குடித்து கொண்டு இருந்ததை அந்த வழியாக சென்ற கிராமத்து மக்கள் பார்த்து இருக்கிறார்கள். மேலும் அவர்கள் சிறிது நேரத்தில் ஒரு மோட்டார் சைக்கிளில் கையில் ரத்தம் வடிந்த நிலையில் இருந்த கத்தி, அரிவாளை அனைவருக்கும் தெரியும்படி வைத்து கொண்டு துணிச்சலாக சென்றதையும் அப்பகுதி மக்கள் பார்த்து இருக்கிறார்கள்.

இதன் பின்னர் தான் அந்த பகுதியில் கொலை சம்பவம் நடந்து இருக்கிறது என்று கிராம மக்களுக்கு தெரியவந்துள்ளது. காலை நேரத்தில் நடந்துள்ள இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

Related Tags :
Next Story