பாலாற்றில் இழுத்து செல்லப்பட்ட ஒருவர் மீட்பு மற்றொருவரை தேடும் பணி தீவிரம்


பாலாற்றில் இழுத்து செல்லப்பட்ட ஒருவர் மீட்பு மற்றொருவரை தேடும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 16 Oct 2017 11:00 PM GMT (Updated: 2017-10-17T03:46:22+05:30)

ஆம்பூர் அருகே பாலாற்று வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட ஒருவர் மீட்கப்பட்டார்.

ஆம்பூர்,

ஆம்பூர் பகுதி பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பச்சகுப்பம் பகுதியில் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் செல்கிறது. பாலாற்று வெள்ளத்தை காண ஏராளமான பொதுமக்கள் அங்கு சென்று வேடிக்கை பார்த்து வருகின்றனர். ஆம்பூர் அருகே வடபுதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 38), ரமேஷ் (28). 2 பேரும் மேஸ்திரி வேலை பார்த்து வருகின்றனர்.

நேற்று மாலை பச்சகுப்பம் பாலாற்று தரைப்பாலத்தின் வழியாக எச்சரிக்கையை மீறி குளிக்க சென்றனர். அப்போது வெள்ளத்தின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் 2 பேரும் வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்டனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக ஆம்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.

மீட்பு

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் வெள்ள நீரில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மூர்த்தியை மீட்டனர். ஆனால் ரமேஷ் கிடைக்கவில்லை. தீயணைப்பு வீரர்கள் அந்த பகுதி முழுவதும் தேடிப்பார்த்தனர். ரமேஷ் கிடைக்கவில்லை. அவர் என்ன ஆனார் என தெரியவில்லை. மேலும் இது குறித்து தகவல் அறிந்ததும் அமைச்சர் கே.சி.வீரமணி அப்பகுதிக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டார்.

மேலும் இரவு நேரம் ஆனதால் தீயணைப்புத்துறையினர் மீட்பு பணியை கைவிட்டு இன்று காலை மீண்டும் தொடரும் என கூறினர். 

Related Tags :
Next Story