திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை தங்க காசுகள் பறிமுதல்


திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை தங்க காசுகள் பறிமுதல்
x
தினத்தந்தி 17 Oct 2017 4:30 AM IST (Updated: 17 Oct 2017 3:46 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது ரூ. 1¼ லட்சம் ரொக்கம் மற்றும் தங்க காசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருச்சி,

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தின் 2-வது தளத்தில் கணக்கு அலுவலகம் உள்ளது. இங்கு உதவி ஆணையராக பிரபுகுமார் ஜோசப் பணிபுரிந்து வருகிறார். தீபாவளியை யொட்டி சிலர் காண்ட்ராக்டர்களிடம் பணம் வசூல் செய்வதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த நிலையில் நேற்று மாலை 4.30 மணி அளவில் மாநகராட்சி கணக்கு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் நவநீதகிருஷ்ணன், சக்திவேல், சேவியர்ராணி, அருள்ஜோதி ஆகியோர் உள்பட 9 பேர் அடங்கிய குழுவினர் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினார்கள்.

அப்போது அலுவலகத்தில் இருந்த மேஜை டிராயர்கள், அலமாரிகள் என அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. சோதனை முடியும் வரை ஊழியர்கள் யாரும் அலுவலகத்தை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. பின்னர், அங்கிருந்த ஊழியர்களிடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து அந்த அலுவலகத்தில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த முக்கிய ஆவணங்கள், கோப்புகளை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர்.

இதையடுத்து மாலை 6 மணி அளவில் அந்த அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் பெண் ஊழியர்களை மட்டும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அதன்பிறகு மீண்டும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 36 ஆயிரத்து 560 ரொக்கம் மற்றும் 42 கிராம் எடையுள்ள மொத்தம் 32 தங்க காசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் உதவி ஆணையர் பிரபுகுமார் ஜோசப், அலுவலர்கள் ராம்குமார், தங்கராஜ், அலுவலக உதவியாளர் பாலமுத்து, கார் டிரைவர் ராஜேந்திரன் ஆகிய 5 பேரிடம் இரவு வரை விசாரணை நடத்தப்பட்டது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறும் போது, இன்று (நேற்று) ஒரு நாள் மட்டும் மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்ற பாதாள சாக்கடை பணி, குடிநீர் பணி உள்ளிட்ட 4 பணிகளுக்கு 33 காசோலைகள் சம்பந்தப்பட்ட காண்ட்ராக்டர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. எனவே கணக்கில் வராத பணம், தங்க காசுகள் தீபாவளி பரிசாக கொடுக்கப்பட்டு இருக்கலாம். எனவே இது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணை முடிவில் தான் அவர்கள் கைது செய்யப்படுவார்களா? என்பது தெரிய வரும் என்று கூறினர். தீபாவளி பண்டிகை நாளை(புதன்கிழமை) கொண்டாடப்பட உள்ள நிலையில் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story