திருப்பூர் பகுதிகளில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டவர் கைது 36¼ பவுன் நகை பறிமுதல்


திருப்பூர் பகுதிகளில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டவர் கைது 36¼ பவுன் நகை பறிமுதல்
x
தினத்தந்தி 17 Oct 2017 3:45 AM IST (Updated: 17 Oct 2017 3:47 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் பகுதிகளில் பல்வேறு வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 36¼ பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

அனுப்பர்பாளையம்,

திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி பகுதியில் அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன்பாபு தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஒரு ஆசாமி போலீசாரை கண்டதும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதை கண்ட போலீசார் அவரை விரட்டி சென்று பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். மேலும் அவர் சட்டைக்குள் ஒரு கத்தியை மறைத்து வைத்திருந்தார்.

இதனால் அந்த ஆசாமி மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் கோவை உக்கடம் அல்அமீன் காலனியை சேர்ந்த சையது சபில் (வயது 41) என்பதும், திருப்பூர் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு இருப்பதும் தெரியவந்தது.

தொடர் விசாரணையில் கிடைத்த தகவல் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சையது சபில் மீது, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அனுப்பர்பாளையம், 15 வேலம்பாளையம் ஆகிய போலீஸ் நிலையங்களில் 8 வழக்குகள் உள்ளன. சையது சபிலுடன், ஜவ்வாது என்கிற சையது, யூசுப், கமலகண்ணன் ஆகியோர் சேர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளனர். இதுதொடர்பாக சையது, யூசுப் மற்றும் கமலக்கண்ணன் ஆகியோர் மீது கோவை மற்றும் கேரளா போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் பதிவாகி இருக்கிறது. இதில் சையது மற்றும் யூசுப் ஆகிய 2 பேரும் கேரள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கமலகண்ணன் தலைமறைவாக உள்ளார்.

மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து சையது சபிலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து 36¼ பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். 

Next Story