முந்திரி ஆலை தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு பணப்பயன்கள் வழங்க கோரிக்கை


முந்திரி ஆலை தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு பணப்பயன்கள் வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 16 Oct 2017 11:00 PM GMT (Updated: 16 Oct 2017 10:22 PM GMT)

பளுகல் முந்திரி ஆலை தொழிலாளர்கள் பணப்பயன்கள் வழங்க கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுவது வழக்கம். இதேபோல் திங்கட்கிழமையான நேற்றும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தலைமையில் நடந்த இந்த முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள், குறைகள், கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மனு கொடுத்தனர்.

இதேபோல் பளுகல் பேரூராட்சி முன்னாள் தலைவர் பிஜு, முன்னாள் துணைத்தலைவர் மது ஆகியோர் தலைமையில் அப்பகுதியில் செயல்பட்டு, தற்போது மூடப்பட்டுள்ள முந்திரி ஆலை ஒன்றில் பணியாற்றிய நிர்மலா மற்றும் பெண்கள் ஏராளமானோர் திரண்டு வந்து மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

30 ஆண்டுகளாக செயல்பட்டு மூடப்பட்ட முந்திரி தொழிற்சாலையில் 50–க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் வேலை செய்து வந்தோம். நாங்கள் இந்த தொழிற்சாலையில் பல வருடங்களாக வேலை செய்து வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அந்த முந்திரி ஆலை மூடப்பட்டது. நாங்கள் பல ஆண்டுகள் வேலை செய்ததில் எங்களுக்கு தரவேண்டிய வருங்கால வைப்புநிதி மற்றும் பணிக்கொடை ஆகிய பணப்பயன்களை தொழிற்சாலை உரிமையாளரிடம் பலமுறை கேட்டும் அவர் எங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் கேட்கும்போதெல்லாம் உடனே வேலை தொடங்குவதாகக்கூறி எங்களை ஏமாற்றி வருகிறார்.

இதன்காரணமாக எங்களை வேறு நிறுவனங்களிலும் வேலைக்கு சேர்க்கவில்லை. நாங்கள் அனைவரும் மிகவும் ஏழ்மை நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதனால் எங்கள் குடும்பம் வறுமையில் வாடுகிறது. ஆகவே அந்த தொழிற்சாலை உரிமையாளரை அழைத்து விசாரித்து எங்களுக்கு கிடைக்க வேண்டிய பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கல்குளம் தாலுகா சுருளக்கோடு மங்களத்தரைவிளையை சேர்ந்த செல்வதாஸ்  என்பவர் தனது உறவினர்களுடன் வந்து  கலெக்டரிடம் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

 எனக்கு மனைவி மற்றும் ‌ஷஜிலா (வயது 25) என்ற மகளும், ஷாஜின் (22) என்ற மகனும் உள்ளனர். நான் மிகவும் நோய்வாய்ப்பட்டு ஏழ்மையில் வாடி வருகிறேன். இந்நிலையில் என் மகன் ஷாஜின் படித்து வேலை கிடைக்காததாலும், வறுமை காரணமாகவும் பெயிண்டிங் வேலை செய்து வந்தான். கடந்த 7–ந் தேதி அன்று பெயிண்டிங் வேலைக்கு சென்றான். அவன் மணலிக்கரையை அடுத்த மணக்காவிளை அருகே முண்டவிளை என்ற ஊரில் உள்ள ஒரு வீட்டின் அருகே பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தபோது, வீட்டின் அருகே சென்றுகொண்டிருந்த உயரழுத்த மின்கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தான்.

இதனால் நாங்கள் எங்கள் மகனை இழந்து பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளோம். எங்கள் வாழ்வாதாரமே எங்கள் மகன்தான். அவனை நம்பிதான் நாங்கள் வாழ்ந்து வந்தோம். எனக்கு திருமண வயதில் ஒரு மகள் இருக்கிறாள். இனி என் மகளை எப்படி திருமணம் செய்து கொடுப்பது என்று ஏங்கி நிற்கிறோம். எங்கள் வாழ்க்கையே கேள்விக்குறியாக உள்ளது. ஆகவே தாங்கள்  எங்கள் வாழ்வாதாரத்தை மனதில் கொண்டு தமிழக அரசு மூலம் எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வீயன்னூர் கன்னிமார் தோட்டம் பகுதியை சேர்ந்த சந்திரன் உள்ளிட்ட சிலர் கலெக்டர் அலுவலகத்தில் தனித்தனியாக மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

நாங்கள் கூலி வேலை செய்து வருகிறோம். எங்கள் வீட்டுக்கு  செறுகோல் ஊராட்சி அலுவலகத்தில் வீட்டு குடிநீர் இணைப்பு கேட்டு மனு கொடுத்தது இல்லை. எங்கள் வீட்டில் குடிநீர் இணைப்பும் இல்லை. இந்தநிலையில் செறுகோல் ஊராட்சியில் இருந்து செலுத்தப்படாமல் உள்ள நிலுவைத்தொகையை வட்டியுடன், தபால் செலவும் சேர்த்து ரூ.1150–ஐ 5 நாட்களுக்குள் செலுத்துமாறு கடிதம் அனுப்பியுள்ளனர். இதனால் மனவேதனை அடைந்துள்ளோம். இது இயற்கை நீதிக்கும், சட்டத்துக்கும் புறம்பான செயல். எனவே தகுந்த நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நாம் தமிழர் வீரத்தமிழர் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிதம்பரலிங்கம் என்ற வீரபாண்டியன் தலைமையில்  ஏராளமானோர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–

இரணியலுக்கும், தக்கலைக்கும் இடையே நெல்லியறைக்கோணம் பகுதியில் அமைந்துள்ள பெருமாள் என்ற மாயக்கண்ணன் கோவிலை இடித்த அதே இடத்தில் மீண்டும் ஏற்படுத்த வேண்டும். தேசிய நெடுஞ்சாலைப்பணியை மாற்றுப்பாதையில் செயல்படுத்த வேண்டும். இந்த கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் மீட்கப்பட வேண்டும். இந்த கோவிலையும், கோவில் அமைந்துள்ள பகுதிகளையும் தமிழக தொல்லியல் துறை மூலம் ஆய்வு செய்து மக்களுக்கு உண்மையை தெரியப்படுத்த வேண்டும். இந்த கோவிலை தமிழர்களின் புராதன அடையாள சின்னமாக அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story