அன்போடு தூத்துக்குடி அட்சயபாத்திரம் திட்டம் மாநகராட்சி ஆணையாளர் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி மாநகராட்சியில் ‘அன்போடு தூத்துக்குடி அட்சயபாத்திரம்‘ என்னும் திட்டத்தை ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் நேற்று தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாநகராட்சியில் ‘அன்போடு தூத்துக்குடி அட்சயபாத்திரம்‘ என்னும் திட்டத்தை ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் நேற்று தொடங்கி வைத்தார்.
புதிய திட்டம் தொடக்கம்தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் வறுமையில் வாடும் மக்கள் மகிழ்ச்சி பெறும் வகையில் “அன்போடு தூத்துக்குடி அட்சயபாத்திரம்“ என்னும் உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று மதியம் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடந்தது. ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தலைமை தாங்கி, திட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உதவி ஆணையர்கள் சரவணன், ராமச்சந்திரன், பிரின்ஸ் ராஜேந்திரன், ரவிநாதன், தொழில் அதிபர் ஆனந்த், மாநகர ஓட்டல் தொழிலாளர் சங்க செயலாளர் செந்தில் ஆறுமுகம் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
பொருட்கள்இந்த திட்டத்தின்படி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் ஒரு குளிர்சாதன பெட்டி மற்றும் அலமாரியும் சேர்த்து வைக்கப்பட்டு உள்ளது. இதில் தண்ணீர் பாட்டில்கள், பழச்சாறு பாட்டில்கள், உலர்ந்த ரொட்டிகள், உலர் தின்பண்டங்கள், டின்களில் அடைக்கப்பட்ட உணவு, காய்கறிகள், பழங்கள், பதிவு செய்யப்பட்ட உணவகங்களில் சமைக்கப்பட்ட உணவு, வீட்டில் சமைக்கப்பட்ட உணவு, பொட்டலமாக கட்டப்பட்ட உணவு ஆகியவற்றை வைக்கலாம். உணவு வகைகள் தூய்மையான பொட்டலத்தில் கட்டப்பட்டு இருக்க வேண்டும். எந்த தேதிக்குள் உபயோகிக்க வேண்டும் என்ற தேதி விவரத்தை குளிர்சான பெட்டியில் உள்ள முத்திரைத்தாள்கள் மூலம் குறிப்பிட வேண்டும்.
அதே நேரத்தில் இந்த குளிர்சாதன பெட்டியில் சமைக்கப்படாத இறைச்சி, கடல் உணவு, பச்சை முட்டைகள், திறந்த நிலையில் உள்ள பால், பாதி உண்ணப்பட்ட உணவு, ஏற்கனவே உறைந்த நிலையில் உள்ள உணவு, பதிவு செய்யப்படாத உணவகங்களில் சமைக்கப்பட்ட உணவு, மதுபானங்கள், காலாவதியான உணவு, அழுகிய பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை வைக்க கூடாது.
டெங்கு தடுப்புபின்னர் ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் நிருபர்களிடம் கூறும் போது, ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்காக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இதில் நல்ல நிலையில் உள்ள உணவுகளை வைக்கலாம். தேவைப்படுபவர்கள் வந்து எடுத்து செல்லலாம். இதனை கண்காணிக்க மாநகராட்சி அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த திட்டத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஓட்டல் உரிமையாளர் சங்கம் ஏற்று உள்ளது.
மேலும் தூத்துக்குடி மாநகராட்சியில் டெங்கு கடந்த ஏப்ரல், மே மாதங்களில் சற்று அதிகமாக இருந்தது. அதன்பிறகு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. 200 சுகாதார பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தூத்துக்குடி மாநகராட்சியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டால், அதனை சுற்றிலும் 500 மீட்டர் தூரத்துக்கு முழு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று கூறினார்.