பரப்பனஅக்ரஹாரா சிறை கைதிகள் ‘திடீர்’ உண்ணாவிரதம்


பரப்பனஅக்ரஹாரா சிறை கைதிகள் ‘திடீர்’ உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 17 Oct 2017 10:30 PM GMT (Updated: 17 Oct 2017 9:56 PM GMT)

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று பரப்பனஅக்ரஹாரா சிறை கைதிகள் திடீரென்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பெங்களூரு,

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், ரூ.2 கோடி லஞ்சமாக பெறப்பட்டு சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், சிறையில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும் சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா, சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் மீது குற்றம்சாட்டினார்.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்மட்ட குழு விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, சிறைத்துறையில் பணியாற்றிய டி.ஜி.பி. சத்திய நாராயணராவ், டி.ஐ.ஜி. ரூபா, பரப்பனஅக்ரஹாரா சிறை தலைமை சூப்பிரண்டு கிருஷ்ணகுமார், சிறை சூப்பிரண்டு அனிதாராய் ஆகியோர் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர். அத்துடன் சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக என்.எஸ்.மேகரிக் நியமிக்கப்பட்டார். மேலும், பரப்பனஅக்ரஹாரா சிறை சூப்பிரண்டாக சோமசேகர் நியமனம் செய்யப்பட்டார்.

கட்டுப்பாடுகள்

இந்த முறைகேடு புகாரை தொடர்ந்து பரப்பனஅக்ரஹாரா சிறையில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும். விதிமீறி நடக்கும் போலீஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. என்.எஸ்.மேகரிக் எச்சரித்தார்.

இதைத்தொடர்ந்து, சிறையில் உள்ள கைதிகளை பார்க்க செல்லும் அவர்களின் உறவினர்கள் தீவிர சோதனைக்கு பிறகே சிறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். அத்துடன், கைதிகளுக்கு அவர்களின் உறவினர்கள் வெளியில் இருந்து உணவுகள் எடுத்து செல்லவும் தடை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், ‘பரோலில்‘ செல்ல விரும்பும் கைதிகளுக்கு ‘பரோல்‘ வழங்க சிறை அதிகாரிகள் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் சிறையில் உள்ள கைதிகளும், கைதிகளின் உறவினர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

இந்த நிலையில், நேற்று காலை திடீரென்று கைதிகள் சிறையின் உள்ளே போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘பரோல்‘ கேட்கும் கைதிகளுக்கு முறையாக ‘பரோல்‘ வழங்க வேண்டும், ‘பரோலில்‘ செல்லும் கைதிகளுக்கு விதிக்கப்படும் கடும் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும். வெளியில் இருந்து உறவினர்கள் வாங்கி வரும் உணவுகளை சிறைக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை கைதிகள் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்த போராட்டத்தின்போது சில கைதிகள் தங்களின் காலை உணவை சாப்பிட மறுத்து உண்ணாவிரதம் இருந்ததோடு, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை செய்யவும் மறுத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. என்.எஸ்.மேகரிக் மற்றும் சிறை சூப்பிரண்டு சோமசேகர் ஆகியோர் சிறைக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறியதாக தெரிகிறது. இதன் தொடர்ச்சியாக, அந்த போராட்டத்தை கைதிகள் கைவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Next Story