திருச்சி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது கலெக்டர் ராஜாமணி தகவல்


திருச்சி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது கலெக்டர் ராஜாமணி தகவல்
x
தினத்தந்தி 17 Oct 2017 10:45 PM GMT (Updated: 17 Oct 2017 10:08 PM GMT)

திருச்சி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. 17 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என்று கலெக்டர் ராஜாமணி தெரிவித்தார்.

திருச்சி,

திருச்சி மாவட்டத்தில் காய்ச்சல் போன்ற நோய்கள் வராமல் தடுத்திட அனைத்துத்துறை அலுவலர்கள் மூலமாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் தீவிரமாக நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருச்சி மாநகராட்சி 9-வது வார்டு மேலசிந்தாமணி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமினையும், கரூர் ரோடு கொசமேட்டுத்தெரு, சுப்ரமணியசுவாமி கோவில் தெரு, காவேரிநகர், கோரிமேட்டுத்தெரு, வெனிஸ்தெரு உள்ளிட்ட தெருக்களில் 88 தூய்மைபணியாளர்கள், 120 தற்காலிக கொசு ஒழிப்பு பணியாளர்களை கொண்டு டெங்கு கொசு ஒழிப்பு பணியினையும் கலெக்டர் ராஜாமணி நேற்று தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் நிருபர் களிடம் கூறுகையில், ‘திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை டெங்கு காய்ச்சலால் இதுவரை யாரும் இறக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் 400 முதல் 500 பேர் வரை பல்வேறு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தனர். தற்போது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 17 பேர் மட்டுமே டெங்கு காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வருகிறார்கள். டெங்கு கொசு ஒழிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ள அரசு அதிகாரிகளுக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு தரவேண்டும்’ என்றார்.

இதனை தொடர்ந்து சிறுகாம்பூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், ஆரம்ப சுகாதார நிலையத்தில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும், பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் பணிகளையும், கொசு ஒழிப்புப்பணிகளையும் மற்றும் நீர்நிலைகளில் குளோரினேசன் செய்யும் பணிகளையும் வீடு, வீடாக சென்று கலெக்டர் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், நகரப் பொறியாளர் அமுதவள்ளி, நகர்நல அதிகாரி சித்ரா ஆகியோர் உடன் சென்று இருந்தனர். 

Next Story