நிதி நிறுவனம் நடத்தி மோசடி: வாடிக்கையாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு விசாரணை


நிதி நிறுவனம் நடத்தி மோசடி: வாடிக்கையாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
x
தினத்தந்தி 18 Oct 2017 3:45 AM IST (Updated: 18 Oct 2017 3:38 AM IST)
t-max-icont-min-icon

களியக்காவிளை அருகே நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்யப்பட்டது தொடர்பாக, வாடிக்கையாளர்களிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ரம்யா பாரதி விசாரணை நடத்தினார்.

களியக்காவிளை,

களியக்காவிளை அருகே மத்தம்பாலையில் நிர்மல் கிருஷ்ணா என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிதி நிறுவனத்தில் குமரி மாவட்டம் மற்றும் கேரளா மாநிலத்தை சேர்ந்த சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைப்புத்தொகை பணம் செலுத்தி இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஓணம் பண்டிகையின் போது, நிதி நிறுவனத்தை திடீரென பூட்டி விட்டு அதன் உரிமையாளர் நிர்மலன் தலைமறைவாகி விட்டார். இதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த மோசடி தொடர்பாக நிதி நிறுவன உரிமையாளர், இயக்குனர்கள் உள்பட 18 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால், உரிமையாளர் நிர்மலன் மற்றும் சிலர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார்கள். அவர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

போலீஸ் சூப்பிரண்டு சோதனை

இந்தநிலையில், சென்னையில் இருந்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ரம்யா பாரதி, நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அங்கு நிதிநிறுவன வழக்கு தொடர்பாக விவரங்களை கேட்டறிந்தார்.

பின்னர், களியக்காவிளை அருகே மத்தம்பாலையில் உள்ள நிதிநிறுவனத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் அங்கு கூடினர். அவர்களை ரம்யா பாரதி நேரில் சந்தித்து பேசி கருத்துக்களை கேட்டறிந்தார். இந்த வழக்கு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் உறுதி அளித்தார். 

Next Story