கல்லூரி மாணவியை கடத்தி திருமணம்: கறிக்கடை தொழிலாளி கைது


கல்லூரி மாணவியை கடத்தி திருமணம்: கறிக்கடை தொழிலாளி கைது
x
தினத்தந்தி 21 Oct 2017 2:00 AM IST (Updated: 20 Oct 2017 6:50 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில், கல்லூரி மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்த கறிக்கடை தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில், கல்லூரி மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்த கறிக்கடை தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

கல்லூரி மாணவி

தூத்துக்குடி ராஜகோபால்நகரை சேர்ந்தவர் டேனியல். இவருடைய மகன் விஜய் (வயது 21). இவர் அந்த பகுதியில் உள்ள கறிக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த 17 வயதுடைய கல்லூரி மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று காதலை வளர்த்து வந்துள்ளனர்.

கடத்தி திருமணம்

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் விஜய் அந்த மாணவியை திருச்செந்தூருக்கு கடத்தி சென்றுள்ளார். அங்கு திருமண வயதை எட்டாத அந்த மாணவியை அவர் வலுக்கட்டாயமாக திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. அவரை பெற்றோர் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லையாம்.

தொழிலாளி கைது

இதுகுறித்து அந்த மாணவியின் தந்தை தூத்துக்குடி தென்பாகம் போலீசாரிடம் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த தொழிலாளி விஜய் மற்றும் அவர் கடத்தி சென்று திருமணம் செய்த மாணவியை பிடித்தனர். அந்த மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்ததாக, விஜய்யை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த மீட்க்கப்பட்ட அந்த மாணவி, தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகே உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளார்.


Next Story