கொட்டாம்பட்டி அருகே வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி


கொட்டாம்பட்டி அருகே வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி
x

கொட்டாம்பட்டி அருகே நடைபெற்ற வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலியானார்கள்.

கொட்டாம்பட்டி,

நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் கோகுலம். இவரது மகன் மணிகண்டன் (வயது 24). டிரைவராக வேலை செய்து வந்தார். இவரின் நண்பர்களான அதே பகுதியை சேர்ந்தவர்கள் முத்துக்குமார், சசிகுமார், கருணாகரன். இவர்கள் அனைவரும் திருப்பதி செல்ல திட்டமிட்டு, நேற்று முன்தினம் இரவு ஒருகாரில் அங்கிருந்து புறப்பட்டனர். காரை மணிகண்டன் ஓட்டி வந்தார்.

நேற்று அதிகாலை கொட்டாம்பட்டியை அடுத்த காடம்பட்டி விலக்கு அருகே நான்கு வழிச்சாலையில் வந்த போது, திடீரென கார் நிலைதடுமாறி ரோட்டின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதியது. அதில் தூக்கி வீசப்பட்டு நடுரோட்டில் தலைகீழாக கார் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் வந்த முத்துக்குமார் உள்ளிட்ட 3 பேர் படுகாயமடைந்த நிலையில் மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இதேபோல கொட்டாம்பட்டியை அடுத்த கருங்காலக்குடி அருகே உள்ள அய்வத்தான்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா (65). இவர் கொட்டாம்பட்டி நான்கு வழிச்சாலையில் உள்ள வலைச்சேரிபட்டி பிரிவு அருகே நடந்து வந்தார். பின்னர் அங்கிருந்து நான்குவழிச்சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது.

அதில் சம்பவ இடத்திலேயே கருப்பையா உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். இந்த வெவ்வேறு விபத்துகள் குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story